Chengaiulama.in

Thursday, 17 November 2022

ஜும்ஆ பயான் 18/11/2022

இஸ்லாத்தில் பெண்களுக்குள்ள உரிமைகள்.

يٰۤاَيُّهَا النَّاسُ اِنَّا خَلَقْنٰكُمْ مِّنْ ذَكَرٍ وَّاُنْثٰى وَجَعَلْنٰكُمْ شُعُوْبًا وَّقَبَآٮِٕلَ لِتَعَارَفُوْا‌  اِنَّ اَكْرَمَكُمْ عِنْدَ اللّٰهِ اَ تْقٰٮكُمْ‌  اِنَّ اللّٰهَ عَلِيْمٌ خَبِيْرٌ‏

மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழந்து) தெரிந்தவன்.(அல்குர்ஆன் : 49:13)

உலக வரலாற்றில் பெண்சமூகம் உரிமைமீறகள்,அடக்குமுறைகள், அத்துமீறல்களை தொடர்ந்து எதிர்க்கொண்டுவருகின்றது.

உலகில் ஐரோப்பா, எகிப்து,இராக், இந்தியா,சீனா போன்ற எந்த நாடுகளிலும் எந்த சமூகத்திலும் பெண்களுகெதிராக எந்த அத்துமீறல்களும் நடைப்பெறவில்லை என சொல்லமுடியாத அளவுக்கு பெண்கள் அநீதமிழைக்கப்பட்டனர். 

ஆண்கள்,பெண்களை தங்களின் வாழ்விற்காகவும்,வசதிக்காகவும் கைமாற்றிக்கொள்ளும் போகப்பொருளாக۔மிருகங்களை விடவும் கேவலமாக நடத்தினர்.

அறியாகைக்கால அரபகத்தில் பெண்கள்.

அரபுகள்,பெண்களை துன்பத்தை தரும் படைப்பாகவும்,துர்சகுனமாகவும் கருதினார்கள். பெண்கள் போதைகளாகவும், வெறும் சடப்பொருளாகவும், போகப் பொருளாகவும்  கருதப்பட்டனர். பெண்குழந்தைகள் பிறந்தால் உயிருடன் புதைக்கப்பட்டனர். பெண்களுக்கு சொத்துரிமை மறுக்கப்பட்டது. இவ்வாறு பெண்ணடிமை சாசனம் எழுதப்பட்டு பெண்கள் மிருகங்களை விட கேவலமாக வழிநடத்தப்பட்டனர்.

وَاِذَا بُشِّرَ اَحَدُهُمْ بِالْاُنْثٰى ظَلَّ وَجْهُهٗ مُسْوَدًّا وَّهُوَ كَظِيْمٌ‌‏

அவர்களில் ஒருவனுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது என்று நன்மாராயங் கூறப்பட்டால் அவன் முகம் கறுத்து விடுகிறது - அவன் கோபமுடையவனாகிறான். (அல்குர்ஆன் : 16:58)

يَتَوَارٰى مِنَ الْقَوْمِ مِنْ سُوْۤءِ مَا بُشِّرَ بِهٖ  اَيُمْسِكُهٗ عَلٰى هُوْنٍ اَمْ يَدُسُّهٗ فِى التُّـرَابِ‌  اَلَا سَآءَ مَا يَحْكُمُوْنَ‏

எதைக் கொண்டு நன்மாராயங் கூறப்பட்டானோ, (அதைத் தீயதாகக் கருதி) அந்தக் கெடுதிக்காக(த் தம்) சமூகத்தாரை விட்டும் ஒளிந்து கொள்கிறான் - அதை இழிவோடு வைத்துக் கொள்வதா? அல்லது அதை (உயிரோடு) மண்ணில் புதைத்து விடுவதா? (என்று குழம்புகிறான்); அவர்கள் (இவ்வாறெல்லாம்) தீர்மானிப்பது மிகவும் கெட்டதல்லவா?(அல்குர்ஆன் : 16:59)

இந்தியாவில் பெண்கள்...

இந்தியாவில் வழக்கத்தில் இருந்த கொடூரமான பெண்களுக்கெதிரான இரண்டு நடைமுறைகள்

# உடன்கட்டை ஏறுதல்.

சதி என்ற கொடிய முறை முதன்மையாக இந்து சமூகங்களில் நடைமுறையில் இருந்தது, சமூதாயத்தில் ஒரு பெண்ணின் கணவர் இறந்துவிட்டால் அந்த விதவைப் பெண் தானாக முன்வந்து நெருப்பில் தனது உயிரை மாய்த்துக்கொள்ளவேண்டும்

# தேவதாசி முறை.

 20-ம் நூற்றாண்டு தொடக்கம்வரை தேவதாசிகள் இல்லாத கோவில்களே தென்னிந்தியாவில் இல்லை. இராசராச சோழன் காலத்தில் தஞ்சை பெரிய கோவிலில் மட்டும் 400 தேவதாசிகள் (தேவரடியார்கள்) இருந்ததாக தெரிய வருகின்றது.

கோவிலுக்கு தேவதாசியாக பணிசெய்யும் பெண்கள், வழிபாடு நேரங்களை தவிர பார்ப்பனர்களுக்கு விபச்சாரிகளாக செயல்படவேண்டும். 45 வயதுக்கு மேலான பெண்களை கோவில் நிர்வாகமே ஏலத்தில் விற்கும் வழக்கமும் இருந்தது.

கி.மு. 200ஆம் ஆண்டில் தற்போதைய இந்தியாவில் அமுலில் இருந்த மனு ஸ்மிருதி என்ற சட்டம் தனது கணவனுக்கு அவமானத்தை ஏற்படுத்தும் பெண்ணை நாய்களுக்கு இரையாக்கிக் கொல்லும் அதிகாரத்தை வழங்கி இருந்தது. மனு ஸ்மிருதியைப் பொறுத்தவரை பெண்கள் ஆண்களின் உடமைகளே. அந்தச் சட்டத்தின் கூறுகள் இன்றுவரை தொடரும் நிலையே உள்ளது.

சீனாவில்...

சீனர்கள் பெண்களை நற்பாக்கியத்தையும் செல்வங்களையும் அழித்துவிடக்கூடிய தண்ணீருக்கு ஒப்பாக்கினர். அவர்கள் தம் மனைவியரை உயிரோடு புதைத்து விடுவதற்கும் விற்றுவிடுவதற்கும் உரிமை பெற்றிருந்தனர்.

பண்டைய ரோம,சுமேரிய,கிரேக்க  நாகரீகங்களில் பெண்கள்...

பழம்பெரும் நாகரீகங்களான அசிரிய,கிரேக்க , ரோம, சுமேரிய நாகரீகங்களில் பெண்களை விடவும் ஆண்கள் உயர்வானவர்கள் என்ற கருத்தும், திருமணத்துக்குப் புறம்பான உறவுகளை நாடும் பெண்களுக்கு அதீத தண்டனை வழங்குவதும் அங்கீகரிக்கப்பட்ட வழக்கமாக இருந்து வந்துள்ளது. 'இறைவனின் ஆசீர்வாதத்துடன், மதகுருமாரின் ஆதரவுடன் உருவாக்கப்பட்ட சட்டங்களால்” பெண்கள் இவ்வாறு கொடூரமாக நடத்தப்பட்டார்கள். அதன் நீட்சியே இன்றுவரை உள்ளது.

ரோமர்கள்...

பண்டைய ரோம சட்டத்தில், பெண்கள் விடயத்தில் திருமணத்துக்கு அப்பாலான உறவு பெருங் குற்றமாகக் கருதப்பட்டது. அத்தகைய குற்றத்துக்கு மரணமே தண்டனை. அவ்வாறு தவறிழைத்த பெண்ணுக்குத் தண்டனை வழங்க ஒத்துழைப்பு நல்காத குடும்பத்தினரின் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.

ரோமர்களுக்கு முன்னதாகவே இதுபோன்ற சட்டங்கள் உலகில் இருந்துள்ளன. மொசப்பத்தோமியாவை ஆட்சி செய்த பபிலோனிய மன்னரான ஹம்முராபி கி.மு. 1780இல் இது தொடர்பான சட்டம் ஒன்றை உருவாக்கியிருந்தார். ஹம்முராபி சட்டம் என அறியப்படும் இந்தச் சட்டத்தின் பிரகாரம் திருமணத்துக்கு அப்பாலான உறவைப் பேணும் பெண்ணைக் கயிற்றால் கட்டி, ஆற்றில் எறிந்து கொல்லும் தண்டனை வழங்கப்பட்டது. எனினும், இதுபோன்ற குற்றத்தைப் புரியும் ஆண்களுக்கு இதே வகையான தண்டனை வழங்கப்படவில்லை.

கிரேக்கர்கள்...

கிரேக்கர்கள் பெண்களை வியாபாரப் பொருட்களாகவே கருதினர். அவர்களுக்கென எந்த உரிமையும் கிடையாது. உரிமைகள் அனைத்தும் ஆண்களுக்கே என்றனர். இன்னும் அப்பெண்களுக்குச் சொத்துரிமை, கொடுக்கல், வாங்கல் போன்ற உரிமைகள் தடுக்கப் பட்டிருந்தன. அவர்களில் பிரபல்யமான தத்துவஞானியான சாக்ரடீஸ் என்பவன் பெண்கள் இருப்பது உலகின் வீழ்ச்சிக்கு மிகப்பெரும் மூல காரணமாகும். மேலும் பெண்கள் விஷ மரத்திற்கு ஒப்பானவர்கள். அம்மரத்தின் புறத் தோற்றம் அழகாக இருக்கும். எனினும் அதன் கனிகளை சிட்டுக்குருவிகள் தின்றவுடனேயே இறந்துவிடுகின்றன என்று கூறியுள்ளான்.

உலகமதங்களிள் பெண்கள்...

உலக மதங்களான இந்து, கிறித்துவம், இசுலாம், புத்தம், ஜைனம், சீக்கியம், யூதம் என ஒரு சிலவே உலகமெலாம் பரவி நின்றன. உலகில் பரவிய மதங்கள் அனைத்தும், எல்லா உயிர்களிடத்தும் அன்பு காட்டவே வழி காட்டின. ஆயினும் எல்லா உயிர்களையும் சமமாக நேசிக்கும் அன்பு உருவாகவில்லை. ஆண்–பெண், உயர்ந்தவர்-தாழ்ந்தவர், ஏழை–பணக்காரர் எனப் பாகுபாடு இருந்து கொண்டேதான் இருக்கிறது. குறிப்பாகப் பெண்களை அடிமைப்படுத்துவது முற்றிலுமாக நீங்கவில்லை. இதற்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஆயினும் மதங்களைப் போதித்த வேதங்களும் சில நேரங்களில் இதற்குக் காரணங்களாகின்றன.

 ”கடவுள் முதலில் ஆணைப்படைத்தான். ஆதாமாகிய அவ்வாணின் விலா எலும்பிலிருந்தே ஏவாளைப் படைத்தான். அந்த ஏவாளே முதல் மனிதனாகிய ஆதாம் தவறிழைக்கக் காரணமானாள். எனவே பெண்கள் அடக்கி வைக்கப்பட்டார்கள்”என்று விவிலியம் கூறுகிறது.

இந்த உலகின் முதன்மை மதம் என்று சொல்லப்படக் கூடிய யூத, கிறிஸ்தவ மதத்தின் வேதநூலான பைபிள் பெண்ணை இப்படித்தான் சித்தரிக்கிறது.

பெண்: ஆன்மா இல்லாதவள், • பிறப்பால் இழிவானவள், • ஆண்களை வஞ்சிக்கும் குணமுடையவள், • விவாகரத்து உரிமையற்றவள், • மறுமணத்திற்கு தகுதியற்றவள், • வாரிசு சொத்து தடுக்கப்பட்டவள், • வேதம் படிக்க அருகதையற்றவள், • மாதத்தீட்டால், பிரசவத்தீட்டால் அசிங்கமானவள், • ஆணின் அதிகாரங்களுக்குள் அடங்கப்பட்டவள். 

  ”கணவன் துர்ப்பழக்கமுள்ளவனாக இருந்தாலும், அந்நிய ஸ்திரீ லோலனாக இருந்தாலும், நற்குணமில்லாதவனாக இருந்தாலும் பதிவிரதையான ஸ்திரீயானவள் அவனைத் தெய்வத்தைப்போல் பூசிக்க வேண்டியது”என்று இந்திய வடமொழி வேதங்கள் கூறுகின்றன.

 ”பெண்ணே! நீ குழந்தைப் பருவம்வரை அப்பன் சொன்னதைக் கேள். வளர்ந்து மணமானதும் கணவன் சொன்னதைக் கேள். உனக்குக் குழந்தை பிறந்து தலையெடுத்ததும் உன் மகன் சொல்வதைக் கேட்க வேண்டும். உனக்கு இதுதான் கதி. நீ சுதந்திரமாக வாழத் தகுதியற்றவள். ஆண் சொல்படி கேள்”என மனுநீதி கூறுகிறது.

  மதங்கள் அனைத்தும் ஆண்களை அடிப்படையாகக் கொண்டே இயங்கி வருகின்றன. உலகப் பெரு மதங்களாகிய கிறித்துவம், இந்து போன்ற எந்த மதங்களும் பெண்களைக் கோவிலுக்குள் அனுமதிப்பதில்லை. பெண்கள் தீண்டத்தகாதவர்கள்; கோயில்களில் பூசை செய்யத் தகுதியற்றவர்கள் என்று பெண்களை ஒதுக்கி வைக்கின்றன. அதற்கு அவர்களின் மாதவிடாய் போன்ற இயற்கை நிகழ்வுகள் காரணங்களாக்கப்படுகின்றன. இவ்வாறு பல நிலைகளில் மதங்களும், மதத்தின் அடிப்படையில் எழுந்த வேதங்களும் பெண்ணடிமைக்கு வழி வகுத்தன.

உலக வரலாற்றில் பெண்ணுரிமை:

 ’ஆதாமின் விலா எலும்பிலிருந்து ஏவாள் உருவாக்கப்பட்டாள்’ என்பதிலிருந்து, அஃதாவது மனிதகுல வரலாறு தொடங்கியதிலிருந்தே பெண்கள் அடக்கி வைக்கப்பட்டு வருகிறார்கள்.

     கி.பி. 586-இல் பிரஞ்சுக்காரர்கள், ’பெண்கள் மனித இனத்தைச் சார்ந்தவர்களா? இல்லையா?’ என்பது பற்றி ஆராயக் கமிட்டி அமைத்தார்கள் என்ற செய்தி, அக்காலத்தில் பெண்கள் எந்தளவிற்குத் தாழ்நிலையில் வைக்கப்பட்டிருந்தார்கள் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.

     கி.பி. 1567-இல் ஸ்காட்லாந்து பாராளுமன்றம், ‘பெண்களுக்கு எந்த உரிமையும் அளிக்கக் கூடாது’ என்றே சட்டம் இயற்றியுள்ளது.

     கி.பி. 1805 வரை, ’ஒரு கணவன் தன் மனைவியை 6 பென்னி காசுகளுக்கு விற்க முடியும்’ என ஆங்கிலேயச் சட்டம் இருந்தது என்றும், 19-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை, ’ஆங்கிலேய பொதுச் சட்டப்படி பெண்கள் குடியுரிமையின்றியே இருந்தார்கள்’ என்றும் வரலாறு தெரிவிக்கின்றது.

 ’பெண்களையும் பிராமணரல்லாதவர்களையும் கொல்லுதல் பாதகமாகாது’ என வடமொழி சாத்திரங்கள் கூறி வந்தன.

இந்தியாவில் 19-ஆம் நூற்றாண்டு வரை தோஷம், பால்ய விவாகம், சதி, விதவைத் திருமண மறுப்பு, சொத்துரிமையின்மை எனப் பெண்கள் வஞ்சிக்கப்பட்டே வந்தார்கள்.  

இத்தகைய சூழலில் 19-ஆம் நூற்றாண்டில்தான் ஐரோப்பாவில் பெண் விடுதலை பற்றிப் பேசப்பட்டது. கி.பி. 1837-இல் சார்லஸ் ப்யூரியே என்பவர்தான் முதன் முதலாகப் ’பெண்ணியம்’ (Feminism) என்ற சொல்லைக் கையாளத் தொடங்கினார். அதன் பின்னரே பெண்ணியம் பற்றிப் பரவலாகப் பேசப்பட்டது.

பழங்காலத்தில் ஆண்களுக்கு மட்டுமே வாக்குரிமை வழங்கப்பட்டு வந்தது. கி.பி. 1780-இல்தான் ’பெண்களுக்கும் வாக்குரிமை வழங்கப்பட வேண்டும்’ என்கிற இயக்கம் பிரான்சு நாட்டில் தொடங்கப்பட்டது.

கி.பி.1860-இல் சுவீடன், இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவின் சில மாகாணங்களில் மட்டும் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டது.

கி.பி.1893-இல் நியூசிலாந்து நாடு வளர்ந்த எல்லாப் பெண்களுக்கும் வாக்குரிமை வழங்கிய முதல் நாடாகத் திகழ்கிறது. அதன்பின் ஆஸ்திரேலியாவில் 1895-இல் பெண்கள் அனைவரும் வாக்குரிமை பெற்றனர்.

ஐரோப்பா நாடுகளில் பின்லாந்து நாடுதான் 1907-இல் முதன் முதலாகப் பெண்கள் அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமையை வழங்கியது. 

இந்தியாவில் 1919-இல் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டது.

இவ்வாறு உலக வரலாறு நெடுகிலும் பெண்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டு வந்ததும், 20-ஆம் நூற்றாண்டில்தான் முழுமையான பெண்ணுரிமை உலகமெலாம் மலர்ந்தது என்பதும் பெண்ணுரிமை பேசிய மேல்நாட்டாரின் நிலையாகக் காணக் கிடைக்கின்றது.  

(நன்றி:கவிஞர், கலைமாமணி நா.இராசசெல்வம்,பெண்ணுரிமை தந்திட்ட பெருமகனார் என்ற நூலிலிருந்து)

நவநாகரீகத்தில், நவீன கண்டுபிடுப்புகளில் முன்னேறிவிட்டாதாக மார்தட்டிக்கொள்ளும் இன்றைய காலக்கட்டத்திலும் பெண்களுக்கு  எதிரான ஆணாதிக்க அடக்குமுறைகள் குறைந்தப்பாடில்ல.

ஆண்டுதோறும் நவம்பர் 25 ஆம் நாள் அன்று சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம்  (International for the Elimination of Violence against Women)உலக அளவில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

உலக அளவில் அனைத்து துறைகளிலும் பெண்கள் அபரிதமான வளர்ச்சி அடைந்த போதிலும் அதை விட அதிக அளவில் பெண்கள் வன்முறைக்கு ஆளாக்கப்படுகிறார்கள் என்பது உண்மை.

1993 ஐநா அமைப்பு பெண்களுக்கு எதிரான வன்முறைகளை செயல்களை சட்டப்படி குற்றம் என அறிவித்து உத்தரவிட்டது. 1999 நவம்பர் 25 சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பெண்களை தாயாய், சகோதரியாய் மதித்து அவர்களுக்கு எதிராக நடத்தப்படும் அனைத்து வழிமுறைகளையும் முற்றிலும் ஒழிக்க சபதம் ஏற்தே இன்னாள் அனுசரிக்கப்படுவதன் நோக்கமாகும்.

இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியுள்ள பாதுகாப்பும், உரிமைகளும்.

பெண்கள் சமுதாயம் இந்த நூற்றாண்டில் போராடிப் பெற்ற நியாயமான பல உரிமைகளை, 1,400 ஆண்டுகளுக்கு முன்பே அவர்கள் எந்தவிதமான போராட்டமும் நடத்தாமலேயே இஸ்லாம் வழங்கி விட்டது.

வழிபாட்டு உரிமையில், சொத்துரிமையில், விவாகரத்து உரிமையில், கல்வி கற்பதில் என அனைத்து உரிமை களையும் வழங்கி அவர்களை கண்ணியப்படுத்திய மார்க்கம் இஸ்லாம்.

இன்று உலகலாவிய ரீதியில் பெண்களுக்கு உரிமைகள் வழங்கப்பட வேண்டும், பெண்கள் சுதந்திரமாக வழிப்படுத்தப்பட வேண்டும், பெண்களின் மகத்துவம் பேணப்பட வேண்டும்,பெண்களுக்கு பாலியல் உரிமைகள் வழங்கப்பட வேண்டும், ஆண்களுக்கும் பெண்களுக்குமிடையில் பால்நிலைத்துவம் பேணப்பட வேண்டும் என பல்வேறு கோஷங்கள் எழுப்ப்ப்பட்டுக்கொண்டிருக்கின்றன. 

இவர்களது பெண்ணுரிமைப்போராட்டம் வெறும் வெற்று கோஷங்களாகவும், இஸ்லாத்தை காழ்ப்புணர்வுடன் விமர்சனம் செய்வதாகவுமே அமைந்திருக்கின்றன. இவற்றின் மூலம் சிறந்த ஒரு தீர்வை எட்ட முடியாது என்பது யதார்த்த பூர்வமான உண்மையாகும். 

பெண்ணின் பெருமையை நிலைநாட்டி, பெண்ணின் மகத்துவத்தை பேணிய ஓரே மார்க்கம் இஸ்லாம் என்றால் அது மிகையாகாது. இஸ்லாம் 1400 வருடங்களுக்கு முன்னர் பெண்ணுரிமை பற்றி பேசியுள்ளது.போலிப் பெண்ணுரிமை பேசும் கூட்டம், தங்கள் காழ்ப்புணர்ச்சியையும் வறட்டு கவுரத்தையும் சற்று கழட்டி வைத்து விட்டு,இஸ்லாமிய வேதமாகிய  திருக்குர்ஆனையும், ரஸூல்ﷺ அவர்களின் சொல், செயல் அங்கீகாரமான ஹதீஸ்களையும் சற்றே நடுநிலையான, நியாயமான பார்வையுடன் பார்த்தார்கள் என்றால் 1428 ஆண்டுகளுக்கு முன்னரே இஸ்லாம் பெண்ணுரிமையை நிறைவாக வழங்கியுள்ளது என்று முழு மனதுடன் ஒப்புக்கொண்டு அதனைப் பின்பற்றவும் செய்வார்கள்.

பிறப்பதில் உள்ள உரிமை!

 பெண்குழந்தை என்றால் சிசுவிலேயே அழித்துவிடுவதையோ அல்லது பிறந்ததும் கள்ளிப்பால் கொடுத்துக் கொல்வதையோ இஸ்லாம் மிக வன்மையாக எதிர்க்கிறது.

وَاِذَا الْمَوْءٗدَةُ سُٮِٕلَتْۙ‏

உயிருடன் புதைக்கப்பட்ட பெண் (குழந்தை) வினவப்படும் போது-(அல்குர்ஆன் : 81:8)

بِاَىِّ ذَنْبٍ قُتِلَتْ‌‏

“எந்தக் குற்றத்திற்காக அது கொல்லப்பட்டது?” என்று-(அல்குர்ஆன் : 81:9)

பெண்குழந்தை பிறந்தால் உண்மையான முஸ்லிம் அதனை ரஹ்மத் (அல்லாஹ்வின் அருட்கொடை) என்று சந்தோஷப்படுவர்.

பெண்சிசுக்கொலையை தடை செய்த நாயகம்ﷺ.

நபிகள் நாயகம் ﷺகாலத்தில் நடந்த ஒரு நிகழ்வைப் பாருங்கள். நபிகளார் தோழர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது இஸ்லாத்திற்கு முந்தைய அறியாமைக் காலத்து பேச்சு எழுந்தது. ஒரு தோழர் தன் அடி மனதில் உறைந்து கிடந்த நிகழ்வைச் சொல்லத் தொடங்கினார். “இறைத் தூதரேﷺ! அந்த அறியாமைக் காலத்தில் என் மனைவி நிறை மாதக் கர்ப்பிணியாக இருந்த நேரம். நான் வியாபார விஷயமாகப் பயணம் செல்ல வேண்டிய கட்டம். என் மனைவியிடம், ‘ஆண் குழந்தை பிறந்தால் பத்திரமாகப் பார்த்துக் கொள். பெண் குழந்தை பிறந்தால் கொன்று புதைத்து விடு’ என்று சொன்னேன். பிறகு நான் பயணத்தில் இருந்து திரும்பியபோது மனைவி என்னிடம், ‘நமக்குப் பெண் குழந்தை பிறந்தது. நல்லவேளை அது இறந்து விட்டது’ என்று சொன்னாள். சில ஆண்டுகள் சென்றன. ஒருநாள் என் வீட்டிற்கு ஒரு அழகான பெண் குழந்தை வந்து விளையாடுவதைக் கண்டு, ‘யாரவள்?’ என்று திடுக்கிட்டுக் கேட்டேன். அதற்கு என் மனைவி, ‘பக்கத்து வீட்டுக் குழந்தை’ என்றாள். அந்தக் குழந்தை என்னிடம் பழகத் தொடங்கியது. குழந்தைக்கும் எனக்கும் இடையே இருந்த பாசத்தைக் கண்ட என் மனைவி, ‘இந்தக் குழந்தை மீது உங்களுக்கு அவ்வளவு பாசமா?’ என்று கேட்டாள். ‘ஆம்.. இவள் என் உயிரல்லவா?’ என்றேன். அப்போது என் மனைவி, ‘அன்று நான் சொன்னது பொய். இது பக்கத்து வீட்டு குழந்தை அல்ல. நம் குழந்தைதான். உங்களுக்குப் பயந்து நான் அப்படிச் சொன்னேன்’ என்றாள்.

நான் மகிழ்ச்சியில் நனைந்திருக்க வேண்டுமல்லவா? ஆனால் அறியாமைக் காலத்து வெறித்தனத்தில் நான், அந்தக் குழந்தையைக் கொல்ல முடிவு செய்தேன். ஆனாலும் பாசம் என்னை விடவில்லை. பாசத்திற்கும், அறியாமைக் கால சிந்தனைகளுக்கும் இடையே நடந்த போராட்டத்தில் பாசம் தோற்றது. ஒருநாள் என் அன்பு மகளைப் பாலை வெளிக்கு அழைத்துச் சென்றேன். என்னுடன் அவள் விளையாடிக் கொண்டும், கதை பேசிக் கொண்டும் இருந்தாள். ஒரு இடத்தில் குழி தோண்டினேன். பாலை வனத்தின் மணல் என் தாடியில் பதிந்தன. அந்தச் செல்ல மகள் ஏதும் அறியாமல், தன் பிஞ்சு விரல்களால் என் தாடியில் உள்ள மணலைத் தட்டி விட்டாள். இறைத்தூதரே! நான் கல்நெஞ்சக்காரன். என் மகளைக் குழியில் தள்ளி மணலைப் போட்டு, உயிரோடு புதைத்து விட்டேன்” என்று நபித் தோழர் சொன்னபோது, நபிகளார் அழ ஆரம்பித்து விட்டார். அருகில் இருந்த தோழர்கள், அந்தத் தோழரைப் பார்த்து, “என்ன காரியம் செய்தீர்? நபிகளாரையே அழச் செய்து விட்டீரே!” என்றபோது, நபிகள் நாயகம்ﷺ, “அந்தக் காலம் மறைந்து விட்டது. நாம் பாவமன்னிப்பைத் தேடி மீண்டு விட்டோம்” என்று கூறியவண்ணம் தனது தாடி நனையும் அளவு அழுதார்கள்.

பின்னர் நபிகள் நாயகம் ﷺகூறினார்கள்: “நாம் எவ்வளவு கல் நெஞ்சகர்களாய் இருந்துள்ளோம். (இஸ்லாத்தின் வருகைக்கு முந்தைய) அறியாமைக் காலத்தில் செய்த செயல்கள் அனைத்தையும் இறைவன் மன்னித்து விடுவான். ஆகவே உமது நற்செயல்களை புதுப்பித்துக் கொள்வீராக!” என்று அத்தோழரைப் பார்த்துக் கூறினார்கள். நபிகள் நாயகம் ﷺதாம் வாழ்ந்த காலத்திலேயே பெண் குழந்தைகளைப் புதைக்கும் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்கள். 

  وَلَا تَقْتُلُوْۤا اَوْلَادَكُمْ مِّنْ اِمْلَاقٍ‌ نَحْنُ نَرْزُقُكُمْ وَاِيَّاهُمْ‌  

“வறுமைக்குப் பயந்து உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள் - ஏனெனில் உங்களுக்கும், அவர்களுக்கும் நாமே உணவளிக்கின்றோம்; .(அல்குர்ஆன் : 6:151)

 என்ற இறை வசனத்தை ஓதிக் காட்டினார்கள். 

وَاِذَا الْمَوْءٗدَةُ سُٮِٕلَتْۙ‏  بِاَىِّ ذَنْبٍ قُتِلَتْ‌‏

மறுமையில் உயிருடன் புதைக்கப்பட்ட குழந்தையிடம், “எந்தக் குற்றத்திற்காக நீ கொல்லப்பட்டாய்?” (81:8) என்று கேட்கப்பட்டு, குற்றம் புரிந்தவர்களுக்குத் தண்டனை வழங்கப்படும் என்பதைக் கூறி மக்களை எச்சரித்தார்கள்.

عن عبد الله بن عباس ـ رضي الله عنه ـ‏ ‏قال: ‏قال رسول الله ‏‏ـ صلى الله عليه وسلم ـ‏: (مَنْ وُلِدَتْ له ابنةٌ فلم يئِدْها ولم يُهنْها، ولم يُؤثرْ ولَده عليها ـ يعني الذكَرَ ـ أدخلَه اللهُ بها الجنة ) رواه أحمد

 “ஒருவன் தன் பெண் குழந்தைகளை உயிருடன் புதைக்காமலும், கொடுமைப்படுத்தாமலும், ஆண் குழந்தைகளுடன் ஒப்பிட்டு வேறுபாடு காட்டாமலும் இருந்தால், இறைவன் அவனைச் சொர்க்கத்தில் நுழையச் செய்வான்” என்று நபிகள் நாயகம்ﷺகூறினார்கள். (நூ அபூதாவூத்)

رواية جابر بن عبد الله ـ رضي الله عنه ـ أن النبي ـ صلى الله عليه وسلم ـ قال: ( مَن كان له ثلاثُ بناتٍ يُؤدِّبُهنَّ ويرحَمُهنَّ ويكفُلُهنَّ وجَبَت له الجنَّةُ ألبتةَ، قيل يا رسولَ اللهِ: فإن كانتا اثنتينِ؟، قال: وإن كانتا اثنتين، قال: فرأى بعضُ القوم أن لو قال: واحدةً، لقال: واحدة ) رواه أحمد وصححه الألباني .

“ஒருவருக்கு மூன்று பெண் குழந்தைகள் இருந்து, அவர்களைச் சிறந்த முறையில் வளர்த்து, கருணை புரிந்து, எந்தவிதக் கேடும் செய்யாமல் இருந்தால் அவருக்குச் சொர்க்கம் நிச்சயம்” என்றார்கள், நபிகள் நாயகம்ﷺ. அருகில் இருந்த நபித்தோழர் கேட்டார்: “இறைத்தூதர் அவர்களே! இரு பெண் குழந்தைகள் என்றால்...?” அதற்கு நபிகளார், “இரு பெண் குழந்தைகள் என்றாலும் சரியே!” என்றார்கள். 

ஆண்,பெண் இருபாலரரும் பிறப்பால் சமமானவர்களே!

ஆண்களும், பெண்களும் ஒரே மூலத்தில் இருந்தே படைக்கப்பட்டார்கள். எனவே இருவருமே கண்ணியத்திற்குரியவர்கள், சமமானவர்கள். இவ்வாறு பெண்களின் மாண்பை உயர்த்தும் வகையில் பல கருத்துகளைச் சமூகத்தில் பதிய வைத்து, பெண்களைப் பற்றிய கண்ணோட்டத்தை நபிகள் நாயகம் மாற்றி அமைத்தார்கள்.

 خَلَقَكُمْ مِّنْ نَّفْسٍ وَّاحِدَةٍ وَّخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيْرًا وَّنِسَآءً‌  

 அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்; பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்; (அல்குர்ஆன் : 4:1)

يٰۤاَيُّهَا النَّاسُ اِنَّا خَلَقْنٰكُمْ مِّنْ ذَكَرٍ وَّاُنْثٰى وَجَعَلْنٰكُمْ شُعُوْبًا وَّقَبَآٮِٕلَ لِتَعَارَفُوْا‌  اِنَّ اَكْرَمَكُمْ عِنْدَ اللّٰهِ اَ تْقٰٮكُمْ‌  اِنَّ اللّٰهَ عَلِيْمٌ خَبِيْرٌ‏

மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழந்து) தெரிந்தவன்.(அல்குர்ஆன் : 49:13)

ஆண்,பெண் என்கிற பாகுபாடின்றி மனித இனம் சிறந்த படைப்பு...

لَقَدْ خَلَقْنَا الْاِنْسَانَ فِىْۤ اَحْسَنِ تَقْوِيْمٍ‏

திடமாக, நாம் மனிதனை மிகவும் அழகிய அமைப்பில் படைத்தோம்.          (அல்குர்ஆன் : 95:4)

பெண் என்பவள் தாயாக,சகோதரியாக, மனைவியாக,மகளாக இப்படி பல்வேறு   வழியில் வாழ்வியல் துணையாக பயணிப்பவர்களோடு நல்ல முறையில் நடந்துக்கொள்ளுமாரும்,அவர்களின் உரிமைகளை பேணிடுமாறும் இஸ்லாம் வலியுறுதத்துகின்றது.

பெண்கள் மென்மையானவர்கள்,ஆணின் விலா எலும்பினால் படைக்கப்பட்டவர்கள். அவர்களோடு கரடுமுரடாக நடந்துக்கொள்ளாதீர்.களிமண்ணினால் படைக்கப்பட்ட ஆணின் நெளிவுசுளிவை அவர்களிடம் எதிர்ப்பார்க்காதீர். அவர்களை சரிசெய்ய நினைத்து வளைத்து உடைத்துவிடாதீர்

என பெண்மையின் மென்மையை அழகாக நபிகள் நாயகம் வருணிப்பார்கள்.

 قال رسول الله صلى الله عليه وسلم:

 اسْتَوْصُوا بالنِّساءِ؛ فإنَّ المَرْأَةَ خُلِقَتْ مِن ضِلَعٍ، وإنَّ أعْوَجَ شَيءٍ في الضِّلَعِ أعْلاهُ، فإنْ ذَهَبْتَ تُقِيمُهُ كَسَرْتَهُ، وإنْ تَرَكْتَهُ لَمْ يَزَلْ أعْوَجَ، فاسْتَوْصُوا بالنِّساءِ.

الراوي : أبو هريرة | المحدث : البخاري 

பெண்களின் கண்ணியத்தை பறைச்சாற்றும் விதமாக நாயகம் ﷺஇவ்விதம் சொன்னார்கள்;

حُبِّبَ الَیَّ مِنَ الدُّنْیَا النِّسَاءُ والطِّیُبُ وَجُعِلَتْ قُرَّةُ عَیْنِيْ فِی الصَّلوٰةِ

"உலகில் எனக்கு பெண்கள் மற்றும் நறுமணப் பொருள் விருப்பத்திற்குறியவைகளாக்கப்பட்டுள்ளன.எனது கண்குளிர்ச்சி தொழுகையில் ஆக்கப்பட்டுள்ளது" 

திருமறைகுர்ஆன் பெண்களிடம் நல்லமுறையில் நடந்துக்கொள்ளுமாறு ஏவுகிறது.

وَعَاشِرُوْهُنَّ بِالْمَعْرُوْفِ‌  فَاِنْ كَرِهْتُمُوْهُنَّ فَعَسٰۤى اَنْ تَكْرَهُوْا شَيْــٴًـــا وَّيَجْعَلَ اللّٰهُ فِيْهِ خَيْرًا كَثِيْرًا‏

 இன்னும், அவர்களுடன் கனிவோடு நடந்து கொள்ளுங்கள் - நீங்கள் அவர்களை வெறுத்தால் (அது சரியில்லை; ஏனெனில்) நீங்கள் ஒன்றை வெறுக்கக் கூடும் அதில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை ஏற்படுத்தி விடலாம்.(அல்குர்ஆன் : 4:19)

இஸ்லாம் பெண்களுக்கு மண விலக்குப் பெறும் உரிமை, மறுமண உரிமை, பொருளீட்டும் உரிமை, சொத்துரிமை, வாரிசுரிமை, கல்வி உரிமை, அரசியலில் பங்கேற்கும் உரிமை என ஆண்களுக்குரிய எல்லா உரிமைகளையும் வழங்கியுள்ளது.

இன்று கூட பெண்களுக்கு வழங்க முடியாத உரிமைகளை இஸ்லாம் 14 நூற்றாண்டுகளுக்கு முன்பே வழங்கி விட்டது என்பதே உண்மை.இன்றும் பெண்களின் உரிமைகள் மீறப்படுவதும்,பெண்களுக்கெதிரான வன்முறைகளும் நாளுகக்கு நாள் பெருகிவருகிறது.

இதற்கு இஸ்லாத்தில் மட்டுமே நிரந்தர தீர்வைகாண முடியும் என்பது நிதர்சனம்.

இஸ்லாம் முன்வைக்கும் தீர்வு ஒன்று "பெண்களுக்கான ஹிஜாப்"

மற்றொன்று "கடுமையான குற்றவியல் சட்டம்".

இதுவே பெண்களின் உரிமை,மானம் காக்கப்பட சரியான தீர்வாகும்.

இன்று நவீன பெண்ணியம் பேசுவோர் "இஸ்லாம்  ஹிஜாப் என்கிற போர்வையில் பெண்களின் உரிமையை பறிக்கிறது" எனக்கூக்கூறல் இடும் இவர்கள் சினமா,விளம்பரம்,ஷோக்கள்,கலை நிகழ்ச்சிக்களில் பெண்களை அறைக்குறை ஆடையில் போகப்பொருளாக இவர்களின் வியாபார லாப நோக்கங்களுக்காக ஆபாசமாக சித்தரித்துக்காட்டும்  குரூர புத்திள்ளவர்கள்  இவர்கள் தான் பெண்களுக்கு எதிரான அனைத்து வன்முறைக்கும் காரணமாக இருக்கின்றார்கள்.

ஹிஜாப் பெண்களை அடிமைப்படுத்துகின்றது என்று கூறுவோர் ஒன்று காழ்ப்புணர்ச்சியினாலோ அல்லது தவறானப்புரிதலாலோ கூறுகிறார்கள்.உண்மையில் ஹிஜாப்  பெண்களின் கண்ணியம்,பெண்களின் பெருமை.இஸ்லாத்தில் ஆண்,பெண் என்கிற பேதம் கிடையாது.உரிமைகள் என்று வரும் போது ஆண்,பெண் என்கிற பாகுபாடு இஸ்லாத்தில் இல்லை.ஆனால் உளவியல் ரீதியிலும்,உடல் ரீதியிலும் இயற்கையிலே ஆண்,பெண் வித்தியாசப்படுவதாலும், ஆணை விட பெண் அதிகம் பாதிக்கப்படுவதால் தான் பெண்களுக்கு ஹிஜாப் போன்ற சட்டங்களை இஸ்லாம் கூறுகிறது.

ஹிஜாப் இஸ்லாமியப் பெண்களுக்கானது மாத்திரம் அல்ல,உலகில் மானத்தோடும்,மரியாதையோடும்,கண்ணியத்தோடும் வாழ நினைக்கும் அனைத்துப் பெண்களுக்குமானதாகும்.

இஸ்லாம் பெண்களின் உரிமைகளைப் பறிக்கிறது என்ற பிரச்சாரம் தீவிரமடைந்துள்ள நிலையிலும் ஆண்களை விட பெண்களே அதிகமாக இஸ்லாத்தை ஏற்று வருகின்றனர்.

பெண்களின் உரிமைகள் காத்திட!பெண்கள் கண்ணியமாக வாழ்திட!இஸ்லாம் ஒன்றே தீர்வு.

வெளியீடு : செங்கை & காஞ்சிபுரம் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை.


No comments:

Post a Comment