Thursday, 27 January 2022

ஜும்ஆ பயான் 28/01/2022

தலைப்பு :

அன்னை ஃபாத்திமா ரலியல்லாஹுத்தஆலா அன்ஹா

  اِنَّمَا يُرِيْدُ اللّٰهُ لِيُذْهِبَ عَنْكُمُ الرِّجْسَ اَهْلَ الْبَيْتِ وَيُطَهِّرَكُمْ تَطْهِيْرًا ‏

(நபியின்) வீட்டையுடையவர்களே! உங்களை விட்டும் அசுத்தங்களை நீக்கி, உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்கிவிடவே அல்லாஹ் நாடுகிறான்.(அல்குர்ஆன் : 33:33)

பிறப்பு.

கண்மணி நாயகம் ﷺ அவர்களின் தவப்புதல்வி,தீன் குல பெண்களின் முன்மாதிரி,சுவனபதியின் தலைவி அன்னை ஃபாத்திமா (ரலி-அன்ஹா)அவர்கள் பிறந்த மாதம், ஜமாதில் ஆகிர் பிறை 20 (கி.பி.604-ல்)ஜும்ஆ தினத்தில் மக்க மாநகரில் அண்ணலம் பெருமானார் ﷺ அவர்களுக்கும்,அன்னவர்களின் அன்பு மனைவி கதீஜா பின்து குவைலத் (ரலி-அன்ஹா)அவர்களுக்கும் நான்காவது மகளாக பிறக்கிறார்கள்.

இன்னொரு அறிவிப்பில் குறைஷிகள் கஃபாவை மீள் கட்டுமானம் செய்த சந்தர்பத்தில்,நாயகம் (ஸல்)அவர்களின் 35 வயதில் அன்னை ஃபாத்திமா (ரலி)அவர்கள் பிறந்தார்கள் என்றுள்ளது.

நபி(ஸல்) அவர்களுக்கு மூன்று ஆண் மக்கள்,நான்கு பெண் மக்கள் இருந்தனர். ஆண் குழந்தைகளில் காசிம்(ரலி), அப்துல்லா(ரலி), இப்ராஹீம் (ரலி) ஆகியோரும். பெண் குழந்தைகளில்  ஜைனப்(ரலி), உம்மு குல்தூம்(ரலி), ருகையா(லி) பாத்திமா(ரலி) ஆகியோரும் இருந்தார்கள்.

அண்ணலம் பெருமானார் ﷺஅவர்களின் கடைசி குழந்தை, அதுவும் பெண் குழந்தை என்பதால் நபியவர்கள் அன்னையவர்களின் மீது அளவுகடந்த பாசம் உள்ளவர்களாக இருந்தார்கள்.

அன்னையவர்களின் இயர்ப்பெயர் ஃபாத்திமா,

இதுவல்லாத சில சிறப்புப் பெயர்களும் உண்டு.

அவற்றில் அஸ்ஸஹ்ரா(ஒளிரும் எழில் நங்கை), ஸையிதத்துன்னிஸா (பெண் குலத்தின் பெருமகள்), அல்முபாரகா (அருட்கொடை), அல்சித்தீகா (வாய்மை நிறைந்தவர்) என்ற பெயர்களும் அவர்களுக்கு இருந்தன.

வளர்ப்பு

அன்னை ஃபாத்திமா அவர்கள் தனது தாய் மற்றும் தந்தையின் அரவணைப்பிலேயே வளர்ந்தார்கள். எனவே சத்தியத்திற்காகப் போராடும் குணம் அவருக்கு இயல்பாகவே வளர்ந்து வந்தது. இன்னும் தன்னால் இயன்ற நேரத்திலெல்லாம் தனது தந்தையாருக்கு வந்த எதிர்ப்புகளை எதிர்த்து வீறு நடை போட்டு வந்த வீரத்திற்குச் சொந்தக்காரராகவும் அவர் திகழ்ந்தார். இன்னும் தனது வசந்த கால இளமைப் பருவத்தை சொல்லொண்ணா துயரங்கள் நிறைந்த அபீதாலிப் பள்ளாத்தாக்கினிலும் அவர் கழித்திருக்கின்றார். இந்த அபீதாலிப் பள்ளத்தாக்கில் தான், முஸ்லிம்கள் சமூக பகிஷ்காரம் செய்யப்பட்டு இரண்டு வருடங்கள் கடுந் துன்பங்களுக்கு ஆளாக்கப்பட்டிருந்தார்கள். இதில் தனது தந்தை மற்றும் தாய், சகோதரிகள் மற்றுமுள்ள முஸ்லிம்களுடன் முஸ்லிம்களாக துயரங்களை ஃபாத்திமா (ரலி) அவர்கள் உறுதியான மனநிலை கொண்டவராக அனுபவித்த சரித்திரத்திற்குச் சொந்தக்காரராகவும் அவர்கள் இருந்தார்கள்.

அன்னையவர்களின் உயர்குணமும், நன் நடத்தையும்.


அன்னை ஃபாத்திமா (ரலி)அவர்கள்,கண்மணி நாயகம்ﷺஅவர்களைப் போலவே உயர்குணம் படைத்தவர்களாக திகழ்ந்தார்கள்.

அன்னையவர்களின் நடை,உடை,பாவனை ஆகியவற்றிலும் நபியவர்களுக்கு ஒப்பானவர்களாக இருந்தார்கள்.

فاقبلت فاطمہ تمشی۔ماتخطئی مشیۃالرسول صلی اللہ علیہ وسلم شیاَ۔

அன்னை ஃபாத்திமா (ரலி)அவர்கள் நடப்பது, ரஸுல் (ஸல்)அவர்களின் நடைக்கு ஒப்பாகஇருக்கும்.

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :இறைத்தூதர் (ஸல்) அவர்களைப் போலவே பாத்திமா ரலி அவர்கள் (குணாதிசயங்களைப் பெற்று) இருந்தார்கள். அவர்களது பேச்சு, உட்காரும் முறை, எழுந்திருக்கும் முறை மற்றும் நடக்கும் முறை – இன்னும் வேறு வார்த்தைகளில் சொல்வதாக இருந்தால் அவர்களது அனைத்து குணநலன்களும் மற்றும் பாவனைகளும் (இறைத்தூதர் (ஸல்)) அவர்களைப் போலவே இருந்தது.


ஈகை குணம்.

பாத்திமா நாயகியாரின் இரு 
மகனார்களும் கடும் நோயால் அவதிப்பட்டனர். எல்லாவித வைத்தியமும் செய்தும் குணமடையவில்லை. இதனால் பெற்றோர்கள் மனம் கலங்கினர். அவர்கள் இருவரும் இறைவனிடம் தங்கள் பிள்ளைகள் குணமடைந்தால் மூன்று நாட்கள் நோன்பு நோற்பதாக வேண்டிக் கொண்டனர்.

அதன்பின் சில நாட்களுக்குள் புதல்வர்கள் இருவரும் நலம் பெற்று வந்தனர். உடனே பெற்றோர் இருவரும் நோன்பிருக்க தீர்மானித்தனர். சிறிதளவு உணவு உண்டு நோன்பு நோற்றனர். நோன்பு திறக்கும் நேரமும் வந்தது,நீர் அருந்தி நோன்பு திறந்தனர். பார்லி ரொட்டி முன் அமர்ந்து ரொட்டியை கைகள் தொட்டதும் வாயிலில் ஒரு குரல் கேட்டது: ‘ நான் பசித்தவன்.ஆண்டவனுக்காக என் பசியைத் தணியுங்கள். பசியால் இறந்து கொண்டிருக்கும் என் குடும்பத்தைக் காப்பாற்றுங்கள்’ என்று.

அடுத்தவர் பசித்திருக்க நீங்கள் உண்ணாதீர்கள் என்ற அண்ணல் நபியின் வாக்கு அவர்கள் முன் தென்பட்டது. உடனே அந்த ரொட்டி முழுவதையும் அந்த ஏழைக்கே கொடுத்துவிட்டார்கள்.

அதேபோல் மற்ற இரண்டு நாட்களும் வாயிலில் உணவு வேண்டி குரல் கேட்கவே,  தங்களுக்கு இல்லாமலேயே இருந்த உணவுகளை கேட்ட அந்த எளியவர்களுக்கே அளித்து மனத்திருப்தி கொண்டனர்.

وَيُطْعِمُوْنَ الطَّعَامَ عَلٰى حُبِّهٖ مِسْكِيْنًا وَّيَتِيْمًا وَّاَسِيْرًا‏
மேலும், அ(வ்விறை)வன் மீதுள்ள பிரியத்தினால் ஏழைகளுக்கும், அநாதைகளுக்கும், சிறைப்பட்டோருக்கும் உணவளிப்பார்கள்.
(அல்குர்ஆன் : 76:8)

அல்லாஹ்வும் வஹீ மூலம் அண்ணல் நபி அவர்களுக்கு அறிவித்தான்: ‘ இவர்கள் (தாங்கள் செய்து கொண்ட பிரமாணத்தை) நேர்ச்சையை,  நிறைவேற்றி வைத்தனர். நீண்ட தண்டனையுடைய நாளைப் பயந்து கொண்டிருந்தனர். மேலும் அல்லாஹ்வின் மீதுள்ள அன்பால் ஏழைகளுக்கும்,அனாதைகளுக்கும் சிறைப்பட்டோருக்கும் உணவளித்து வந்தனர்.(தானம் பெறுவோரிடம்) நாம் உங்களுக்கு ஆகாரம் அளிப்பதெல்லாம் அல்லாஹ்வின் முகத்திற்கேவாகும். உங்களிடம் நான் யாதொரு கூலியையோ அல்லது (நீங்கள் எங்களுக்கு) நன்றி கூறுவதையோ விரும்பவில்லை. மேலும் நிச்சயமாக நாம் எமது இறைவனின் ஒரு நாளை பயப்படுகிறோம். அந்நாளில் முகம் கடுகடுத்துச் சுண்டிப் போய்விடும்.(என்றே கூறி வந்தனர்)’
(அல்குர்ஆன் 76:7,8,9,10)

ஹிஜ்ரத்.

நாயகம் (ஸல்)அவர்கள் மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்து சென்ற சமயத்தில்,ஃபாத்திமா (ரலி)உம்மு குல்தூம் ஆகிய இருவரும் மக்காவில் இருந்தனர்.

 அவ்விருவரையும் அழைத்து வரும் பொறுப்பு,ஜைத் இப்னு ராபிஆ மற்றும் அபூராஃபிஃ ஆகிய இரு தோழர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.அபூபக்ர் சித்தீக் (ரலி)அவர்கள் இரு ஒட்டகங்களையும்,இன்னும் ஐந்து திர்ஹம்களையும் அவர்களிடம் கொடுத்தனுப்பி,இருவரும் வந்து சேர்ந்தார்கள்.


திருமணம்.

பதினைந்து வயது பூர்த்தியாகியிருந்த பாத்திமா நாயகியை  முக்கிய நபர்களாகக் கருதப்பட்ட பலர் திருமணம் செய்ய  நபி (ஸல்) அவர்களிடம் அணுக ஆரம்பித்தார்கள். ஆனால் நபி (ஸல்) அவர்களோ, அல்லாஹ்வின் கட்டளையை எதிர்பார்த்திருந்தார்கள். அஸதுல்லாஹ் ( அல்லாஹ்வின் அரிமா) என்று நாயகத்தால் போற்றப்பட்ட அலீ(ரலி) அவர்களுக்கு மணம் முடிக்க அல்லாஹ்விடம் அனுமதி கிடைத்தது.

பாத்திமா(ரலி) அவர்களுக்கு ஹிஜ்ரி இரண்டாம் வருடம் ஸபர் மாதத்தில் 15 வயது 5 மாதம் பூர்த்தியான போது, அலி (ரலி) அவர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் எளிமையான முறையில் திருமணம் செய்து வைத்தார்கள். அப்போது அலி (ரலி) அவர்களின் வயது 25 வருடமும் 5 மாதமும் ஆகும்.


நபி (ஸல்) தம் மகளுக்குக் கொடுத்த சீதனம்.

புதுமணத்தம்பதிகளாக புது வீட்டுக்கு குடிபோக விருக்கின்ற தம்பதிகளுக்கு சில அடிப்படையான பொருள்கள் கொள்முதல் செய்யப்பட்டன. ஒரு படுக்கை, காய்ந்த பேரீத்தம் மர மட்டைகளால் ஆன தலையணை, ஒரு தட்டு, ஒரு தம்ளர், தோலால் செய்யப்பட்ட தண்ணீர்ப் பை ஒன்று மற்றும் மாவு அரைக்கக் கூடிய திரிகை ஒன்று இவை தான் நபி (ஸல்) அவர்களின் அன்புக்கினிய மகள் ஃபாத்திமா (ரழி) அவர்களின் திருமணத்திற்காக வாங்கப்பட்ட பொருட்களின் பட்டியலாகும்.

مسند أحمد 715 - حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ عَمْرٍو، وَأَبُو سَعِيدٍ قَالا: حَدَّثَنَا زَائِدَةُ، حَدَّثَنَا (2) عَطَاءُ بْنُ السَّائِبِ، عَنْ أَبِيهِ، عَنْ عَلِيٍّ، قَالَ: " جَهَّزَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاطِمَةَ فِي خَمِيلٍ، وَقِرْبَةٍ، وَوِسَادَةِ أَدَمٍ حَشْوُهَا إِذْخِرٌ " قَالَ أَبُو سَعِيدٍ: لِيفٌ (3)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பாத்திமா (ரலி) அவர்களுக்காக வேலைப்பாடுகள் செய்யப்பட்ட போர்வை ஒன்றையும், தண்ணீர் தோல் பை ஒன்றையும், இத்கிர் புல்லால் அடைக்கப்பட்ட தலையணை ஒன்றையும் தயார் செய்தார்கள். (அறிவிப்பவர் : அலீ (ரலி)                   நூல்கள் : நஸாயீ, இப்னுமாஜா, அஹ்மத்)


பாத்திமா (ரலி) அவர்களின் சிறப்பு.

 سیدۃنساء اھل الجنۃ

நபி (ஸல்) அவர்கள், ஃபாத்திமா, சொர்க்கவாசிகளில் பெண்களின் தலைவி யாவார் என்று சொன்னார்கள்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஃபாத்திமா என்னில் ஒரு பகுதியாவார். எனவே, அவருக்குக் கோபமூட்டியவர் எனக்குக் கோபமூட்டியவராவார் என மிஸ்வர் இப்னு மக்ரமா(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:உலக மாதர்களில் உன்னதமானவர்கள் நால்வர். இம்றானின் மகள் மர்யம், குவைலிதின் மகள் கதீஜா, மஸாஹிமின் மகள் (பிர்அவ்னின் மனைவி) ஆஸியா மற்றும் முஹம்மதின் மகள் பாத்திமா.” (39)

பூமான் நபி(ஸல்) அவர்கள் தங்கள் மகளாரின் மீது அதிக பிரியம் வைத்திருந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் வீட்டை விட்டு வெளியேறும் போது பாத்திமா (ரலி) அவர்களிடம் விடை பெற்றுதான் செல்வார்கள். நபி (ஸல்) அவர்கள் பிராயாணத்திலிருந்து திரும்பும் போது பாத்திமா (ரலி) அவர்களை கண்ட பின்னே மற்ற வேலைகளை செய்வார்கள். அலி(ரலி) அவர்கள் அபூஜஹ்லின் மகளை திருமணம் செய்ய விரும்பினார்கள். இதனையறிந்து பாத்திமா (ரலி) அவர்கள் மனவேதனை அடைந்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் பாத்திமா (ரலி) அவர்கள் எனது தேகத்தின் (உடலின்) ஒரு பாகம் , யார் பாத்திமா (ரலி) அவர்களின் மனதை வேதனை படுத்துகிறாரோ அவர் என் மனதை வேதனை படுத்தியவர் ஆவார். இந்த செய்தியை கேள்விபட்ட அலி (ரலி) அவர்கள், பாத்திமா (ரலி) அவர்கள் உயிரோடு இருக்கும் வரை நான் யாரையும் திருமணம் செய்ய மாட்டேன் என்றார்கள்.

பாத்திமா (ரலி) அவர்கள் மூலமே "மாநபியின் மேன்மைமிகு குடும்பம் இவ்வையகத்தில் தோன்றி கொண்டிருப்பது" அவர்களின் சிறப்புகளுக்கு சிறப்பை ஏற்படுத்துகிறது.       

ஒரு நாள் அதிகாலை சுப்ஹ் வேலையில்  அண்ணலம் மெருமானார்ﷺஅவர்கள் கம்பளிப் போர்வையை போர்த்திக்கொண்டு வெளியே வந்தார்கள்.அப்போது நபிகளாரின் அருமை பேரர் ஹசன் (ரலி)அவர்கள் வந்தார்கள்.அவர்களை நபிகளார் போர்வைக்குள் போர்த்திக்கொண்டார்கள்.பின்பு இன்னொரு பேரர் ஹுஸைன் (ரலி)அவர்கள் வர,அவர்களையும் போர்க்குள் போர்த்திக்கொள்ள,பின்னாலே தன் பாசமிகு மகளார் ஃபாத்திமா (ரலி)அவர்கள் வர,அவர்களையும் போர்வைக்குள் போர்த்திக்கொண்டார்கள்.இறுதியாக தங்களின் மருமகனார் அலீ(ரலி)அவர்கள் வந்துசேர,அவர்களையும் போர்வைக்குள் போர்த்திக்கொண்டு பின் வரும் வசனத்தை ஓதினார்கள்.

اِنَّمَا يُرِيْدُ اللّٰهُ لِيُذْهِبَ عَنْكُمُ الرِّجْسَ اَهْلَ الْبَيْتِ وَيُطَهِّرَكُمْ تَطْهِيْرًا ‏

(நபியின்) வீட்டையுடையவர்களே! உங்களை விட்டும் அசுத்தங்களை நீக்கி, உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்கிவிடவே அல்லாஹ் நாடுகிறான்.(அல்குர்ஆன் : 33:33)


வீட்டு வேலைகளை  செய்தார்கள்.

அலீ(ரலி) அறிவித்தார். (என் துணைவியாரான) 'பாத்திமா அவர்கள் மாவரைக்கும் திருகையினால் தமக்கு ஏற்பட்ட வேதனையைக் குறித்து முறையிட்டார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சில போர்க் கைதிகள் கொண்டு வரப்பட்டிருக்கிறார்கள் (அவர்களை நபி(ஸல்) அவர்கள் முஸ்லிம்களிடையே பங்கிடவிருக்கிறார்கள்) என்னும் செய்தி ஃபாத்திமா(ரலி) அவர்களுக்கு எட்டியது. உடனே, அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் (அந்தப் போர்க் கைதிகளிலிருந்து) ஒரு பணியாளை (தமக்குக் கொடுக்கும்படி) கேட்கச் சென்றார்கள். ஆனால், நபி(ஸல்) அவர்கள் வீட்டில் இல்லாததால் அவர்களை ஃபாத்திமா(ரலி) அவர்களால் அந்த நேரத்தில் சந்திக்க முடியவில்லை. எனவே, ஆயிஷா(ரலி) அவர்களிடம் (தாம் வந்த காரணத்தைக்) கூறி(விட்டுத் திரும்பி)னார்கள். பின்னர், நபி(ஸல்) அவர்கள் வந்தவுடன் அவர்களுக்கு ஆயிஷா(ரலி) விஷயத்தைச் சொன்னார்கள். (விபரமறிந்த) நபி(ஸல்) அவர்கள் நாங்கள் படுக்கைக்குச் சென்றுவிட்ட பின்னால் எங்களிடம் வருகை தந்தார்கள். அவர்களைக் கண்டவுடன் நாங்கள் எழுந்து நிற்க முனைந்தோம். நபி(ஸல்) அவர்கள், '(எழுந்திருக்க வேண்டாம்.) உங்கள் இடத்திலேயே இருவரும் இருங்கள்' என்று கூறினார்கள். (பிறகு) நான் அவர்களின் பாதத்தின் குளிர்ச்சியை என் நெஞ்சின் மீது உணர்ந்தேன். (அந்த அளவிற்கு எங்கள் அருகில் வந்து அமர்ந்தார்கள்.) பின்னர், 'நீங்கள் இருவரும் என்னிடம் கேட்டதை விடச் சிறந்த ஒன்றை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? நீங்கள் படுக்கைக்குச் செல்லும்போது 'அல்லாஹு அக்பர் - அல்லாஹ் பெரியவன்' என்று முப்பத்து நான்கு முறையும், 'அல்ஹம்து லில்லாஹ் - புகழனைத்தும் அல்லாஹ்விற்கே' என்று முப்பத்து மூன்று முறையும், 'சுப்ஹானல்லாஹ் - அல்லாஹ் குறைகளிலிருந்து தூய்மையானவன்' என்று முப்பத்து மூன்று முறையும் சொல்லுங்கள். ஏனெனில், அது நீங்கள் இருவரும் என்னிடம் கேட்டதை விடச் சிறந்ததாகும்' என்றார்கள்.             (ஸஹீஹ் புகாரி (3113)


தந்தைக்கு உதவிடுதல்.

நபி(ஸல்) அவர்கள் கஃபத்துல்லாஹ்்வில் தொழுது கொண்டிருந்தபோது அபூ ஜஹ்லும் அவனுடைய தோழர்களும் அங்கே அமர்ந்திருந்தனர். அவர்களில் சிலர் சிலரைப் பார்த்து 'இன்ன குடும்பத்தினரின் அறுக்கப்பட்ட ஒட்டகத்தின் கர்ப்பப்பையைக் கொண்டு வந்து முஹம்மத் ஸஜ்தாச் செய்யும்போது அவருடைய முதுகின் மீது போடுவதற்கு உங்களில் யார் தயார்?' என்று கேட்டனர். அப்போது அக்கூட்டத்தில் மிக இழிந்த ஒருவன் அதைக் கொண்டு வந்தான். நபி(ஸல்) அவர்கள் ஸஜ்தாச் செய்வதைப் பார்த்ததும் அவர்களின் இரண்டு புஜங்களுக்கிடையில் போட்டுவிட்டான். அதை நான் பார்த்துக் கொண்டுதானிருந்தேன். ஆனால், அதைத் தடுத்து நிறுத்த எனக்கு அன்று சக்தி இருக்கவில்லை. இந்நிகழ்ச்சியைப் பார்த்து அங்கு அமர்ந்திருந்த இறைமறுப்பாளர்கள் ஒருவரின் மீது ஒருவர் விழுந்து சிரித்தனர். நபி(ஸல்) அவர்களோ தலையை உயர்த்த முடியாதவர்களாக ஸஜ்தாவிலேயே இருந்தார்கள். அப்போது ஃபாத்திமா(ரலி) அங்கே வந்து, நபி(ஸல்) அவர்களின் முதுகின் மீது போடப்பட்டிருந்ததை எடுத்து அப்புறப்படுத்தினார்கள். பின்னர் நபி(ஸல்) அவர்கள் தங்களின் தலையை உயர்த்தி 'யா அல்லாஹ்! குறைஷிகளை நீ கவனித்துக் கொள்வாயாக' என்று மூன்று முறை கூறினார்கள். அவர்களுக்குக் கேடாக நபி(ஸல்) அவர்கள் பிரார்த்தித்தது குறைஷிகளுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியது. ஏனெனில், 'அந்நகரில் கேட்கப்படும் பிரார்த்தனைகள் அங்கீகரிக்கப்படும்' என அவர்களும் நம்பியிருநார்கள். 

பின்னர் நபி(ஸல்) அவர்கள் (அங்கிருந்தோரின்) பெயர்களைக் குறிப்பிட்டு, 'யா அல்லாஹ்! அபூ ஜஹ்ல், உத்பா இப்னு ரபீஆ, ஷைபா இப்னு ரபீஆ, வலீத் இப்னு உத்பா, உமய்யா இப்னு கலப், உக்பா இப்னு அபீ முயீத் ஆகியோரை நீ கவனித்துக் கொள்வாயாக!' என்று கூறினார்கள். ஏழாவது ஒரு நபரின் பெயரை நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். அதை நான் மறந்துவிட்டேன். என்னுடைய உயிர் எவன் கையிலிருக்கிறதோ அந்த அல்லாஹ்வின் மீது ஆணையாக நபி(ஸல) அவர்க்ள குறிப்பிட்ட அனைவரும் பத்ருப் போர்க்களத்தில் 'கலீப்' என்ற பாழ் கிணற்றில் செத்து வீழ்ந்து கிடந்ததை பார்த்தேன்' என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.(ஸஹீஹ் புகாரி (240))

அன்னையவர்களின் குழந்தைச் செல்வங்கள்.


   ஆண் குழந்தைகள்

அலீ (ரழி) மற்றும் ஃபாத்திமா (ரழி) தம்பதிகளுக்கு ஹிஜ்ரி 3 ம் ஆண்டு ரமலான் மாதத்தில் முதல் குழந்தை பிறந்தது. தனக்குப் பேரக் குழந்தை பிறந்திருப்பதை அறிந்த நபி (ஸல்) அவர்கள் தனது மகளையும், பேரனையும் காண விரைந்து சென்றார்கள். பேரனுக்கு ஹஸன் என்ற பெயரைச் சூட்டி, அதானும் கூறினார்கள். பிறந்ததிலிருந்து ஏழாவது நாளில் தலை முடியைச் சிரைத்து சுத்தமாக்கி, அந்தமுடியின் எடையின் அளவுக்கு வெள்ளியை நிறுத்து, அதனை ஏழைகளுக்குத் தானமாக வழங்கினார்கள்.

ஹிஜ்ரி 4 ம் வருடம் ஷஃபான் மாதம் ஃபாத்திமா (ரலி) அவர்களுக்கு இரண்டாவது குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு ஹுஸைன் என்று நபி (ஸல்) அவர்கள் பெயரிட்டார்கள். அந்தக் குழந்தையின் காதிலும் பாங்கு சொன்னார்கள். மூன்றாவது குழந்தையாக முஃஸின் என்பவர் பிறந்தார், அவர் குழந்தையாக இருந்தபொழுதே இறந்து விட்டார் என்று கூறப்படுகின்றது. தனது இரண்டு பேரக் குழந்தைகளையும் மிகவும் நேசித்தார்கள் நபி (ஸல்) அவர்கள். மேலும், அவர்களைக் குறித்து, ''இவர்கள் எனது வாச மலர்கள், இன்னும் சுவனத்தின் இளைஞர்களது தலைவர்கள்" என்று பெருமை படக் கூறக் கூடியவர்களாக இருந்தார்கள்.

பெண் குழந்தைகள்

ஹிஜ்ரி 5 ம் ஆண்டு, ஃபாத்திமா (ரழி) அலீ (ரழி) தம்பதிகளுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அதற்கு ஸைனப் என்று நபி (ஸல்) அவர்கள் பெயரிட்டார்கள். மீண்டும் ஹிஜ்ரி 7 ம் ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அதற்கு உம்மு குல்தூம் என்று நபி (ஸல்) அவர்கள் பெயரிட்டார்கள்

அன்னை ஃபாத்திமா (ரலி)அவர்களின் வணக்க வழிப்பாடுகள்.

செய்யதுனா ஹசன்(ரலி)அவர்கள் கூறுகிறார்கள்;என் அன்னையவர்கள் வீட்டில் அலுவல்களை நல்லமுறையில் செய்வதுடனே காலை முதல் மாலை வரை இறைவணக்கத்திலும்,பயபக்தியோடு இறைவனைப் புகழ்ந்து பிரார்த்தனைப் புரிந்துக்கொண்டிருப்பார்கள்.

தனக்காக இல்லாமல் இந்த உம்மத்திலுள்ள முஸ்லிமான ஆண்,பெண் அனைவருக்கும் துஆ செய்வார்கள் .

மீளாத்துயரில் ஆழ்த்திய அண்ணலாரின் பிரிவு.

இறுதி ஹஜ்ஜை நிறைவேற்றி வந்த அண்ணலார் நோயுற்றார்கள். அதையறிந்த மகளார் ஆறாத் துயரில் ஆழ்ந்தார்கள். அருகிலிருந்து பணிவிடைகள் செய்து வந்தார்கள். நோய் ஏற்பட்டு இருவாரங்கள் ஆகிவிட்டன. நோய் குறைந்தபாடில்லை.இறுதியில் தமது இறுதிநிலை எய்திவிட்டது என்பதை உணர்ந்த அண்ணலார் அழுது கொண்டிருந்த பாத்திமா நாயகி அவர்களை அருகே அழைத்தார்கள்.அவர்களின் செவிகளில் ஏதோ கூறினார்கள். அண்ணல் அவர்களின் செய்தி கேட்டு பாத்திமா நாயகி அவர்களின் விழிகள் கண்ணீரைச் சிந்தின. உடனே அவர்கள் மீண்டும் மகளார் செவியில் மறைவாய் ஏதோ சொன்னார்கள். அதனைக் காதுற்ற பாத்திமா நாயகி அவர்களின் வதனம் சிறிதே நிம்மதியடைந்தது.

இதனைக் கவனித்துக் கொண்டிருந்த ஆயிஷா பிராட்டியார் அவர்களுக்கு ஏதும் புரியவில்லை.பிறகு இதுபற்றி அவர்களிடம் கேட்டபோது ‘அல்லாஹ்வின் தூதர் அவர்கள் முதலில் என்னிடம் தாம் மறையப் போகும் செய்தியைக் கூறினார்கள். அதைக் கேட்டு நான் கண்ணீர் சிந்தினேன். மறுகணம் என்னிடம் நீர் தாம் முதலில் என்னை சுவர்க்கத்தில் சந்திப்பீர்’ என்றார்கள். அதைக் கேட்டு நான் அகமகிழ்ந்தேன்’ என்றார்கள்.

சிறிது நேரத்தில் அண்ணலாரின் உயிர் பிரிந்தது. அண்ணலாரை அடக்கம் செய்து விட்டு திரும்பிய அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களைப் பார்த்து ‘உங்களுக்கு இறைவனின் திருத்தூதர் மீது மண்ணைத் தள்ள எவ்வாறு மனம் வந்தது?என்று வருத்தத்துடன் கேட்டார்கள். அவர்களின் துக்கத்தால் அவர்கள் வீரிட்டார்கள். இந்த சப்தம் கேட்டு மெய்சிலிர்த்த அனஸ் ரலி அவர்கள்  இறைவனின் விருப்பத்தை யாரால் தடுத்து நிறுத்த முடியும் என்று இதமாக ஆறுதல் கூறினார்கள்.

பலபேர்களும் அவர்களுக்கு ஆறுதல் கூறிச் சென்றார்கள். அப்படியும் அவர்களின் துயரத்தை குறைக்க முடியவில்லை. அவர்களின் உள்ளத்தில் அந்தளவு துக்கம் ஆழமாக படிந்து விட்டது. மனைவியாரின் கவலையை போக்க முயன்ற அலி நாயகம் அவர்களும் தம் முயற்சியில் தோற்றே விட்டார்கள் என்று சொல்லலாம்.

அன்னையவர்களின் மரணம்.

பாத்திமா நாயகி அவர்களுக்கு வயது 29. அன்று ரமலான் மாதம் பிறை 3. தம் புதல்வர்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு தம் தந்தையாரின் ரவ்லாவிற்கு சென்றார்கள். அங்கு துஆ இறைஞ்சினார்கள். பின்னர் வீடு திரும்பினார்கள். பிறகு குளித்து தூய உடை அணிந்தார்கள். ஜஃபர் அவர்களின் மனைவி அஸ்மா அவர்களிடம் எங்கும் சென்றிட வேண்டாம் என்று வேண்டியபின் படுக்கச் சென்றார்கள்.

சற்று நேரம் சென்றபின் அஸ்மா நாயகி அவர்கள் பாத்திமா நாயகியை வெளியிலிருந்தே அழைத்தார்கள். பதில் வராததைக் கண்டு உள்ளே சென்று பார்த்தார்கள். அங்கு அவர்கள் கண்ட காட்சி அவர்களைப் பதற வைத்ததது. ஆம். உலகை உய்விக்க வந்த உத்தம தூதரின் இதயக் கனி அன்னை பாத்திமா நாயகி அவர்கள் நீங்காத் துயில் கொண்டிருந்தனர்.

ஆறு மாதமே ஆவதற்குள் அடைந்த புண் ஆறுவதற்குள் விழுந்த துயரிலிருந்து மீளுவதற்குள் மற்றொரு பெரும் துயரம் நேர்ந்தது மக்களை நைத்தது.

அல்லாஹ்வின் தூதர் அவர்களின்  மறைவை நம்மிடையே பாத்திமா ரலி அவர்கள்  இருந்ததால் மறந்திருந்தோம். உம்முடைய முகத்தில் தான் அல்லாஹ்வின் தூதர் முகத்தை இனி நாங்கள் காண இயலுமா?’ என்று அலி ரலி அவர்கள் பெரும் துயரத்துடன் அரற்றினார்கள்.

அளவற்ற நாணம் கொண்டிருந்ததால் பாத்திமா நாயகி அவர்களின் திருவுடல் அவர்கள் கேட்டுக் கொண்டதிற்கிணங்க. அன்னாரின் விருப்பப்படி இரவில் மதீனா நகர் வழியே எடுத்துச் செல்லப்பட்டது. அலி ரலி அவர்கள் ஜனாஸா தொழுகை நடத்தினர். இறுதியில் பாத்திமா நாயகி அவர்களில் திருவுடல் ஜன்னத்துல் பகீயில் நல்லடக்கம் செய்யப்பட்டது. 

அல்லாஹுத்தஆலா அன்னையவர்களின் வழிநடக்கும் மேன்மக்களாக நம்மையும்,நம் பெண்களையும் ஆக்கி அருள்ப் புரிவானாக!ஆமீன்.


வெளியீடு : செங்கல்பட்டு & காஞ்சிபுரம் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை.

Featured post

ஜும்ஆ பயான் 15/11/2024

தலைப்பு: போதையால் சீரழியும் இளைய தலைமுறை அல்லாஹுத்தஆலா மனித படைப்பின் நோக்கத்தை விரிவான முறையில் பின்வருமாறு விவரித்துள்ளாரன். وَمَا خَلَقْت...