Chengaiulama.in

Thursday, 5 August 2021

ஜும்ஆ பயான்.06/08/2021

தலைப்பு:

ஹிஜ்ரத் ஒர் பார்வை.


ஹிஜ்ரத் என்றால் என்ன?

ஹிஜ்ரத் என்றால் அரபியில் "தனித்துவிடுவது","பிரிவது","விடைப்பெறுவது" "நாட்டை துறந்து வெளியேறுவது" என்பனப் போன்ற பல பொருள்கள் உள்ளன. 

கொஞ்சம் விரிவாக சொல்லப்போனால்...

"ஹிஜ்ரத் என்றால் தனது எல்லா உலக ஆதாயங்களையும் இழந்து, சொந்த மண்ணில் உள்ள உடைமைகளை அப்படியே விட்டுவிட்டு தன்னையும் தனது மார்க்கத்தையும் காப்பாற்றிக் கொள்ள தனது சொந்த நாட்டை, சொந்த ஊரைத் துறந்து அந்நிய நாட்டுக்கு அந்நிய ஊருக்குச் செல்வதாகும். இவ்வாறு நாடு துறப்பவர்கள், செல்லும் வழியில் அல்லது செல்வதற்கு முன் பல ஆபத்துகளைச் சந்திக்க வேண்டி வரும். உயிர் பறிபோகலாம்; உடைமைகள் அபகரிக்கப்படலாம்; செல்லுமிடத்தில் எத்தகைய எதிர்காலத்தை முன்னோக்க வேண்டியிருக்குமோ? அங்கு என்னென்ன கவலைகளும், துக்கங்களும், துயரங்களும் மறைந்திருக்கின்றனவோ? என்று அறியாத நிலையில் மேற்கொள்ளும் பயணமே ஹிஜ்ரத்தாகும்".


ஹிஜ்ரத் செய்தவரின் சிறப்பு.

وَالَّذِيْنَ اٰمَنُوْا وَهَاجَرُوْا وَجٰهَدُوْا فِىْ سَبِيْلِ اللّٰهِ وَالَّذِيْنَ اَاوَوْا وَّنَصَرُوْۤا اُولٰۤٮِٕكَ هُمُ الْمُؤْمِنُوْنَ حَقًّا‌  لَّهُمْ مَّغْفِرَةٌ وَّرِزْقٌ كَرِيْمٌ‏ 

எவர்கள் ஈமான் கொண்டு (தம்) ஊரைத்துறந்து அல்லாஹ்வின் பாதையில் போர் புரிகின்றாரோ அ(த்தகைய)வரும் எவர் அ(த்தகைய)வர்களுக்கு புகலிடம் கொடுத்து, உதவி செய்கின்றார்களோ அவர்களும் தான் உண்மையான முஃமின்கள் ஆவார்கள் - அவர்களுக்கு மன்னிப்பு உண்டு. கண்ணியமான உணவும் உண்டு.(அல்குர்ஆன் : 8:74)


நபிமார்களின் ஹிஜ்ரத்.

முன் வாழ்ந்த நபிமார்கள் பல் வேறு நோக்கங்களுக்காக ஹிஜ்ரத் செய்தார்கள் என்கிறது வரலாறு.

இறைதூதர்கள் தங்களின் தாய் நாட்டில் மக்களுக்கு தூதுத்துவத்தையும்,சீர்திருத்தப் பணியையும் மேற்கொள்ளும் போது எதிரிகளால் பல இன்னல்கள்,சோதனைகளை சந்திக்கநேரிடும்.

அந்த சோதனைகள் எல்லைகடக்கும் போது அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று தங்களின் தாயகத்தை துறந்து வேறு மாகாணத்திற்கோ,அல்லது வேறு நாட்டிற்கோ ஹிஜ்ரத் செய்துள்ளார்கள்.

நபி இப்ராஹீம்(அலை)அவர்கள் கொடுங்கோலன் நம்ரூத்தின் அடக்குமுறை,அநீதியிலிருந்து தங்களை தற்காத்துக்கொள்ள பாபிலோன் எனும் ஊரை விட்டும் ஷாம்(சிரியா)தேசத்திற்கு ஹிஜ்ரத் செய்தார்கள்.

இவ்விதமே முன் வாழ்ந்த நபிமார்களில் பலர் பல்வேறு நோக்கங்களுக்காக ஹிஜ்ரத் செய்தார்கள் என்கிறது வரலாறு.


காருண்ய நபி(ஸல்)யின் ஹிஜ்ரத்.

முன் வாழ்ந்த நபிமார்களைப் போலவே நம் கண்மணி நாயகம்(ஸல்)அவர்களின் ஹிஜ்ரத்திற்கும் பல முக்கிய காரணங்கள் உண்டு.

நபிகளாரின் தாய் மண்ணான புனித மக்கா மாநகரில் அன்னவர்கள் சொல்லோண்ணா துயரங்களை அனுபவித்தார்கள்.அன்னவர்களின் பூவுடல் நோவடைய தாக்கப்பட்டார்கள். சில பொழுது கற்களைக்கொண்டும்,வேறு சில பொழுது செத்தப்பிராணியின் குடல் போன்ற கழிவுகளை திருமேனில் கொட்டியும் தாக்குதலுக்குள்ளாக்கபட்டார்கள்.

அன்னவர்களின் அழைப்புப் பணியை எந்த விதத்திலெல்லாம் தடுக்கமுடியுமோ அனைத்தையும் விரோதிகள் முயற்சித்தார்கள்.

சிறைப்பிடிப்பது,அல்லது ஊர்விலக்கு செய்வது,அப்பாவி இஸ்லாமியர்களை உயிர்போகும் அளவுக்கு தாக்குவது என பல இன்னல்கள் செய்தார்கள்.

وإنما ثبت عنه صلى الله عليه وسلم أنه قال: ما أوذي أحد ما أوذيت. وفي رواية : ما أوذي أحد ما أوذيت في الله. رواهما أبو نعيم وحسنهما الألباني.

ويؤيد ذلك ما في الحديث: لقد أخفت في الله وما يخاف أحد، ولقد أوذيت في الله وما يؤذى أحد. رواه الترمذي وصححه الألباني

ஒரு தடவை நாயகம் (ஸல்)அவர்களே ."எனக்கு முன்வந்த நபிமார்கள் இறைப்பாதையில் என் அளவுக்கு சிரமங்களையோ,துன்பங்களையோ சந்தித்திருக்கமாட்டார்கள்"என்று சொன்னார்கள்"

மக்கத்து  காபிர்கள் மக்கத்து ரோஜாவான மாநபி (ஸல்)அவர்களை கொல்லவும் துனிந்துவிட்டார்கள்.

இச்சமயத்தில் தான் அல்லாஹ் தன் நபிக்கு....

وَاِذْ يَمْكُرُ بِكَ الَّذِيْنَ كَفَرُوْا لِيُثْبِتُوْكَ اَوْ يَقْتُلُوْكَ اَوْ يُخْرِجُوْكَ‌ وَيَمْكُرُوْنَ وَيَمْكُرُ اللّٰهُ‌ وَاللّٰهُ خَيْرُ الْمٰكِرِيْنَ‏

(நபியே!) உம்மைச் சிறைப்படுத்தவோ, அல்லது உம்மைக் கொலை செய்யவோ அல்லது உம்மை (ஊரைவிட்டு) வெளியேற்றிவிடவோ நிராகரிப்போர் சூழ்ச்சிசெய்ததை நினைவு கூறுவீராக; அவர்களும் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தனர்; அல்லாஹ்வும் (அவர்களுக்கு எதிராகச்) சூழ்ச்சி செய்து கொண்டிருந்தான். சூழ்ச்சி செய்வோரில் எல்லாம் அல்லாஹ் மிகவும் மேன்மையுடையவன்.(அல்குர்ஆன் : 8:30)

என்ற வசனத்தை இறக்கி விட்டு ,நபியே!மதினாவிற்கு ஹிஜ்ரத் செய்யுங்கள் என்று கூறினான்.

ஹிஜ்ரத் பயணம்.

நபி(ஸல்)அவர்களை எதிரிகள்  கொலை செய்ய திட்டம் தீட்டி, அவர்களின் வீட்டை சுற்றி முற்றுகையிட்டபோது,

நபி (ஸல்) அவர்கள் அலி(ரலி)அவர்களை தங்களின் படுக்கையில் படுக்க வைத்துவிட்டு,யாசின் சூராவின் ...

وَجَعَلْنَا مِنْ بَيْنِ اَيْدِيْهِمْ سَدًّا وَّمِنْ خَلْفِهِمْ سَدًّا فَاَغْشَيْنٰهُمْ فَهُمْ لَا يُبْصِرُوْنَ‏

இன்னும் நாம் அவர்களுக்கு முன்னே ஒரு தடுப்பையும் அவர்களுக்குப் பின்னே ஒரு தடுப்பையும் ஏற்படுத்தியுள்ளோம்; (இவ்வாறாக) அவர்களை மூடிவிட்டோம் - ஆகையால் அவர்கள் பார்க்க முடியாது.(அல்குர்ஆன் : 36:9)                                     என்ற வசனத்தை ஓதி வெளியிலிருந்த காஃபிர்களின் முகத்தில் மண்ணை தூவி விட்டு,யார் கண்களிலும் படாமல் அபூபகர்(ரலி)அவர்களை மட்டும் துணைக்கு அழைத்துக் கொண்டு மதினாவை நோக்கி ஹிஜ்ரத் பயணத்தை துவக்கினார்கள்.(ஸீரது இப்னு ஹிஷாம்)


தவ்ரு குகையில் இருவரும்.

ஹிஜ்ரத் செல்லும் வழியில் ஹழ்ரத் அபுபகர் (ரலி)அவர்கள் நாயகம் (ஸல்)அவர்களை எதிரிகள் எந்த விதத்திலும் தாக்குதல் தொடுத்துவிடக்கூடாது என நாலாபுறமும் நோட்டமிட்டாவர்களாக,பாதுகாப்பு அரணாக சென்றார்கள்.வழியில் சற்று இளைப்பாறிக்கொள்வதற்காக தவ்ரு குகையில் தங்க முடிவு செய்ததும்,    உடனே ஹழ்ரத் அபுபகர்(ரலி)அவர்கள் குகையினுள் சென்று விஷ ஜந்துகள்,வனவிலங்கு ஏதும் இல்லை என உறுதி செய்ததற்கு பின் நாயகம்(ஸல்)அவர்களை உள்ளே அழைக்கிறார்கள்.

நபி(ஸல்)குகையில் சென்றதுமே ஓய்வெடுப்பதற்காக தங்களின் முபாரக்கான தலையை அபுபகர்(ரலி)அவர்களின் மடியில் வைத்து உறங்கிவிட, அபுபகர்(ரலி) அவர்களுக்கு அருகில் ஒரு பொந்து தென்பட்டதும்,அதிலிருந்து ஏதேனும் விஷஜந்து பெருமானாரை தீண்டிவிடக்கூடாது என தன் காலின் பெருவிரலால் அந்த பொந்தை அடைத்துக்கொள்ள,நினைத்தது போலவே பொந்தில் உள்ள ஒரு பாம்பு அபுபகர்(ரலி) அவர்களை தீண்ட,வலியை பொறுத்துக் கொண்டு நபியின் தூக்கம் கலைந்து விடக் கூடாது என அசையாமல் இருந்தார்கள்.

நபி (ஸல்)அவர்கள் விழித்தெழுந்து பார்த்த போது அபுபகர்(ரலி)அவர்களின் கண்கள் சிவந்து விஷம் தலைக்கேறி விட்டதை அறிந்து,தங்களின் முபாரக்கான எச்சிலை பாம்பு தீண்டிய இடத்தில் தடவ அபுபகர்(ரலி)அவர்களுக்கு விஷம் தெளிந்து பழையநிலைக்கு திரும்புகிறார்கள்.(பத்ஹுல் பாரி,மிஷ்காத்)


கவலைப்படாதீர்!அல்லாஹ் நம்மோடு இருக்கிறான்"

நாயகம் (ஸல்)அவர்களை தேடிக்கொண்டுவந்த காஃபிர்கள் தவ்ரு குகைக்கு அருகில் நடமாடுவதைக் கண்ட அபுபகர்(ரலி)அவர்கள் பதற்றமடைய,நாயகம் (ஸல்)அவர்கள் மிக்க நிதானமாக "கவலைப்படாதீர்!அல்லாஹ் நம்மோடு இருக்கிறான்"என்று சொன்னார்கள்.அதை அருள்மறையாம்  குர்ஆன் இவ்வாறு கூறுகிறது.

اِلَّا تَـنْصُرُوْهُ فَقَدْ نَصَرَهُ اللّٰهُ اِذْ اَخْرَجَهُ الَّذِيْنَ كَفَرُوْا ثَانِىَ اثْنَيْنِ اِذْ هُمَا فِى الْغَارِ اِذْ يَقُوْلُ لِصَاحِبِهٖ لَا تَحْزَنْ اِنَّ اللّٰهَ مَعَنَا‌  فَاَنْزَلَ اللّٰهُ سَكِيْنَـتَهٗ عَلَيْهِ وَاَ يَّدَهٗ بِجُنُوْدٍ لَّمْ تَرَوْهَا وَجَعَلَ كَلِمَةَ الَّذِيْنَ كَفَرُوا السُّفْلٰى‌  وَكَلِمَةُ اللّٰهِ هِىَ الْعُلْيَا  وَاللّٰهُ عَزِيْزٌ حَكِيْمٌ‏

(நம் தூதராகிய) அவருக்கு நீங்கள் உதவி செய்யா விட்டால், (அவருக்கு யாதொரு இழப்புமில்லை;) நிராகரிப்பவர்கள் அவரை ஊரை விட்டு வெளியேற்றியபோது நிச்சயமாக அல்லாஹ் அவருக்கு உதவி செய்தே இருக்கின்றான்; குகையில் இருவரில் ஒருவராக இருந்த போது, (நம் தூதர்) தம் தோழரிடம், “கவலைப்படாதீர்கள்; நிச்சயமாக அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான்” என்று கூறினார். அப்போது அவர் மீது அல்லாஹ் தன் சாந்தியை இறக்கி வைத்தான்; மேலும் நீங்கள் பார்க்க முடியாப் படைகளைக் கொண்டு அவரைப் பலப்படுத்தினான்; நிராகரிப்போரின் வாக்கைக் கீழாக்கினான்; ஏனெனில் அல்லாஹ்வின் வாக்குத்தான் (எப்போதும்) மேலோங்கும் - அல்லாஹ் மிகைத்தவன், ஞானமிக்கவன்.(அல்குர்ஆன் : 9:40)

தவ்ரு குகையில் மூன்று தினங்கள் தங்கியதற்கு பின்னால் மீண்டும் மதினாவை நோக்கிய ஹிஜ்ரத் பயணம் துவங்குகிறது.

குபாவில் இருவரும்.

ரபிவுல் அவ்வல் பிறை 1ல் துவங்கிய ஹிஜ்ரத் பயணம்,பிறை 12ல் குபாவை வந்தடைகிறார்கள்.அங்கு குல்தூம் இப்னு ஹத்மு (ரலி)என்ற ஸஹாபியிடம் சில தினங்கள் தங்குகிறார்கள்.அப்போது தான் அங்கு நபி(ஸல்)அவர்களின் முதல் மஸ்ஜித் என்ற  சிறப்பைப் பெற்ற மஸ்ஜித் அல் குபா கட்டப்பட்டு,முதல் ஜும்ஆவை நாயகம் (ஸல்)அவர்கள் பனு ஸலீம் என்ற அந்த கோத்திரத்தவர்களுக்கு நடத்தி தருகிறார்கள்.

குபா மஸ்ஜித் மற்றும் குபா வாசிகள் குறித்து குர்ஆன் இவ்வாறு புகழ்ந்து கூறுகிறது.

لَا تَقُمْ فِيْهِ اَبَدًا ‌ لَمَسْجِدٌ اُسِّسَ عَلَى التَّقْوٰى مِنْ اَوَّلِ يَوْمٍ اَحَقُّ اَنْ تَقُوْمَ فِيْهِ‌ فِيْهِ رِجَالٌ يُّحِبُّوْنَ اَنْ يَّتَطَهَّرُوْا ‌ وَاللّٰهُ يُحِبُّ الْمُطَّهِّرِيْنَ‏

ஆகவே, (நபியே!) அங்கு நீர் தொழுகைக்காக ஒருக்காலும் நிற்க வேண்டாம் - நிச்சயமாக ஆரம்ப தினத்திலேயே பயபக்தியின் மீது அடிகோலப்பட்ட மஸ்ஜிது உள்ளது; அதில் நீர் நின்று (தொழவும், தொழ வைக்கவும்) மிகவும் தகுதியானது; அங்கிருக்கும் மனிதர்கள் தூய்மையுடையோராக இருப்பதையே விரும்புகிறார்கள். அல்லாஹ் தூய்மையுடையோரையே விரும்புகிறான்.(அல்குர்ஆன் : 9:108)


மதினாவிற்குள் மாநபி (ஸல்).

ஈருலகத்தூதர்,தங்களின் உயிரை விட மேலாக நேசிக்கும் முஹம்மது (ஸல்)அவர்கள் தங்களின் ஊருக்கு வருகிறார்கள் என்பதை அறிந்த மதினா அன்சாரி ஸஹாபக்கள் வரவேற்க, கேள்விப்பட்ட நாள் முதல் ஊரின் எல்லைக்கு சென்று நின்றுக்கொள்வார்கள்.

அன்று ஒரு தினம் வெள்ளி கிழமை நன்பகல் பின்னேரம் நபியின் திருப்பாதங்கள் தங்கள் மண்ணில் பட்டதுமே மகிழ்ச்சிப்பெருக்கில்


اَللہُ اَکْبَر ُ، جَاءَنَا رَسُوْل اللہِ جَاءَ مُحَمَّدٌ

"அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப் பெரியவன்)இதோ அல்லாஹுவின் தூதர் எங்களிடத்திலே வந்துவிட்டார்கள்.முஹம்மத் (ஸல்)அவர்கள் வந்துவிட்டார்கள்"என முழக்கமிட்டார்கள்.

குதூகலமடைந்த பெண்களும்,சிறார்களும் ......

طَلَعَ الْبَدْرُ عَلَیْنَا

مِنْ ثنِیّاتِ الوَداَع

وَجَبَتْ شُکْرُعَلَیْنَا

ماَدَعیٰ لِلٰہِ دَا ع

ஸனியாத்தில் விதாஃ எனும் கணவாய்களுக்கு கிடையே முஹம்மதெனும் முழு மதி தோன்றி விட்டது...

அல்லாஹுவிடம் பிரார்த்திப்போர் பிரார்த்திக்கும் காலமெல்லாம்...நம் மீது நன்றி செலுத்துவது கடமையாகும் என்றெல்லாம் கீதம்  இசைத்து நபியை வரவேற்றார்கள்.

ஹிஜ்ரத் பயணத்தில் நபியின் முஃஜிஸா எனும் அற்புதங்கள்.

1)தவ்ரு குகையில் அபூபகர்(ரலி)அவர்களை பாம்புக்கொட்டிவிட, நபி(ஸல்)அவர்கள் எச்சில் தொட்டு தடவ பாம்பின் விஷம் முறிந்து,குணமானது.

2)காஃபிர்களிடமிருந்து நபியை காக்க குகையின் வாயிலில் சிலந்தி வலைப்பின்னியதும்,உம்மு கைலான் என்ற மரமும்,அதன் மீது இரண்டுப் புறாக்கள் கூடு கட்டியதும், நபியின் முஃஜிஸாக்கள்.

3)சுராகா இப்னு மாலிக் என்பவர் நபியை பிடிக்க வரும் போது பூமி அவரின் பாதங்களை பிடித்துக் கொண்டது.(இவர் பின் நாட்களில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்.)

4)உம்மு மஃபத் என்பவரின் பால்கறக்காத ஆட்டின் மடுவில் நாயகம் (ஸல்)அவர்களின் திருக்கரங்கள் பட்டதும்,பால் சுரந்து பாத்திரம் நிரம்பியது.

5)நபி(ஸல்)அவர்கள் ஹிஜ்ரத் கிளம்பிய போது எதிரிகளின் கண்களில் மண்ணை தூவி,அவர்களின் கண்ணெதிரே அந்த இடத்தை கடந்து சென்றார்கள்.யாருக்கும் அவர்களை பார்க்க முடியவில்லை.அல்லாஹ் அவர்களின் கண்களுக்கு திரையிட்டு விட்டான்.


ஹிஜ்ரத் பயணமே ஹிஜ்ரி யானது.

ஹிஜ்ரி ஆண்டு என்பது நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மறைவிற்கு பின் இரண்டாவது ஜனாதிபதியாக பொறுப்பேற்ற உமர் (ரலியல்லாஹு அன்ஹு)அவர்களின் ஆட்சிகாலத்தில் தோற்றுவிக்கப்பட்டது. மக்காவை துறந்து மதீனாவிற்கு வந்த 16-வது ஆண்டு இந்த நிகழ்சி நடைபெற்றது. மைமூன் பின் மஹ்ரான் என்பவர் ஒரு முறை உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களிடம் ஒரு மனிதர் தனது தேவையை ஒரு காகிதத்தில் எழுதிக் கொடுக்கின்றார்.

​​அதில் ஷஃபான் என்று மட்டும் எழுதப்பட்டு இருந்தது. உமர் (ரலியல்லாஹு அன்ஹு)அவர்கள் அம்மனிதரிடம் எந்த வருடத்து ஷஃபான்? இந்த வருடமா? அடுத்த வருடமா? என்று வினவினார்கள். பிறகு உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் காலத்தின் கணக்கீட்டின் அவசியத்தை உணந்தவகளாக! மற்ற தோழர்களோடு கலந்து ஆலோசிக்கிறாகள்.

ஸஹாபாக்களின் கருத்து பரிமாற்றத்திற்குப்பின் ஹிஜ்ரத்-ஐ அடிப்படையாக கொண்டு இஸ்லாமிய ஆண்டை அமலுக்கு கொண்டு வந்தார்கள்.

(நூல்: அல்பிதாயா-வன்னிஹாயா-பாகம்3-பக்கம்-206,207).

வரலாற்று ஆய்வாளர்கள் நபிகளாரின் வாழ்வில் ஹிஜ்ரத்தை இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு மிக முக்கியமான மைல்கல்லாகவும்,உலகெங்கும் இஸ்லாம் பரவ காரணமாகவும் குறிப்பிடுகிறார்கள்.

நாயகம்(ஸல்)அவர்களைத் தொடர்ந்து ஸஹாபாப்பெருமக்களும்,தாபிஈன்கள், தபவுத்தாபிஈன்கள்,இறைநேசச் செல்வர்கள் அகிலமெங்கும் ஹிஜ்ரத் செய்ததன் விளைவாகவே எட்டுத்திக்கும் இஸ்லாம் பரவியது,இன்றும் பரவிக்கொண்டிருகின்றது.


எனவே ஹிஜ்ரதைப் போற்றுவோம் நபி வழி நடப்போம்.


வெளியீடு: 

செங்கல்பட்டு & காஞ்சிபுரம் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை.

No comments:

Post a Comment