Chengaiulama.in

Thursday, 8 April 2021

ஜும்ஆ பயான் 09/04/2021

தலைப்பு:

       ரமலானே வருக!

شَهْرُ رَمَضَانَ الَّذِىْٓ اُنْزِلَ فِيْهِ الْقُرْاٰنُ هُدًى لِّلنَّاسِ وَ بَيِّنٰتٍ مِّنَ

 الْهُدٰى وَالْفُرْقَانِ 

ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை - தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது;(அல்குர்ஆன் : 2:185)ச

சர்வதேசஅளவில் இஸ்லாமியர்கள், "மகத்துவமிக்க ரமலானை" வரவேற்க தயராகிக்கொண்டிருக்கிறார்கள். முன்னெப்போதுமில்லாத அளவுக்கு இவ்வருட ரமலான் முக்கியத்துவம் பெறுகிறது.

காரணம்: கடந்த 2020ஆம் ஆண்டு கொரொணா பெருந்தொற்றின் பாதிப்பால் சர்வ தேச அளவில் போடப்பட்ட தொடர் ஊரடங்கு காலத்தில், ரமலானில் மஸ்ஜிதுக்கு சென்று ஜமாஅத் தொழுகை,தராவீஹ் போன்ற எந்த அமல்களையும் நிறைவேற்ற முடியாத கையறு நிலை,அது மட்டுமா லைலதுல் கத்ர், இரண்டு ஈது பெருநாட்கள், மற்றும் புனித மக்கா சென்று ஹஜ் செய்ய ஹாஜிகளுக்கு தடைப் போன்ற பல சோதனைகளை கடந்து, இவ்வருட ரமலான் எவ்வித சோதனைகளும் அன்றி முழுமையாக நோன்புகளை நோற்று மஸ்ஜிதிற்கு சென்று எல்லா அமல்களையும் செய்யும் பாக்கியத்தை தா இறைவா! என்ற இறைஞ்சுதலோடும், நாயகம் (ஸல்) அவர்கள் கற்று தந்த.

اللهم بارك لنا فى رجب وشعبان وبلغنا رمضان

"இரட்சகனே! எங்களுக்கு ரஜபிலும் ஷஃபானிலும் பரகத் செய்வாயாக மேலும், ரமழானை எங்களுக்கு அடையச் செய்வாயாக’" என்ற பிரார்த்தனையோடும், வரவிருக்கிற "புனித ரமலானை" எதிர்நோக்கி காத்திருக்கிறது இஸ்லாமிய உலகம்.

ஆனால் நமது முன்னோர்கள் ஒவ்வொரு ரமலானையுமே அச்சத்தோடும் ஆதரவோடும்,மிகுந்த மகிழ்ச்சியோடும் எதிர்நோக்குபவர்களாக இருந்தார்கள்.

ரமலானும்,நம் கண்மணி  நாயகம்(ஸல்)அவர்களும்

நபி (ஸல்) அவர்கள் எந்த சந்தர்பத்திலும் தனது ஆயுளை நீளமாக்கி தரும்படி இறைவனிடம் இறைஞ்சியது கிடையாது.இறையழைப்பை ஏற்க எப்போதும் தயாராக இருப்பார்கள். ஆனால் அவர்கள் வாழ்ந்த காலங்களில்  ரமலானில் மட்டும் உயிரோடிருக்க வேண்டி துஆ செய்திருக்கிறார்கள். மட்டுமல்லாமல் இந்த உம்மத்தையும் அவ்விதம் துஆச் செய்ய ஆர்வமூட்டியிருக்கிறார்கள்.

நபி(ஸல்)அவர்கள் ரமலான் மாதம் வருவதற்கு முன்னால் அம்மாதத்தின் சிறப்புகளையும், மேன்மைகளையும் கூறி ஸஹாபாக்களை அமல்கள் செய்ய தூண்டுவார்கள் என ஹதீஸ்களில் வருகிறது.

فأعظِمْ بها من بشارة يزفها النبي - صلى الله عليه وسلم - لصحابته حين قال لهم:"أتاكم رمضان، شهر مبارك، فرض الله - عز وجل - عليكم صيامه، تُفتَح فيه أبواب السماء، وتُغلَق فيه أبواب الجحيم، وتُغَلُّ فيه مَرَدة الشياطين، لله فيه ليلة هي خير من ألف شهر، من حُرِمَ خيرها فقد حرم" صحيح سنن النسائي.

"உங்களிடம் பரகத் நிறைந்த ரமலான் மாதம் வந்திருக்கிறது.

அல்லாஹுத்தஆலா உங்களின் மீது அதன்( ரமலான் மாத)நோன்பை கடமையாக்கியிருக்கிறான்.அம்மாதம் வானங்களின் கதவுகள் திறக்கப்படும்.அ(ம்மாதத்)தில் நரகின் கதவுகள் தாழிடப்படும்.அ(ம்மாதத்)தில் முரண்டுப்பிடிக்கும் ஷைத்தான்கள் விலங்கிடப்படுவார்கள். அ(ம்மாதத்)தில் அல்லாஹ் இரவு ஒன்றை வைத்திருக்கிறான்.அது ஆயிரம் மாதங்களை விடவும் சிறந்தது.அதன் சிறப்புக்களை இழந்தவன் அனைத்தையும் இழந்துவிட்டான்"என நபி(ஸல்)அவர்கள் தம் தோழர்களிடம் கூறினார்கள்.(நூல்:ஸஹீஹு சுனனு நஸாஈ)

நோன்பாளிகளுக்கு மட்டுமே அனுமதி...

கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:

சொர்க்கத்தில் “ரய்யான்” என்று கூறப்படும் ஒரு வாசல் இருக்கிறது! மறுமை நாளில் அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள்! நோன்பாளிகள் எங்கே, என்று கேட்கப்படும் உடனே அவர்கள் எழுவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள்! அவர்கள் நுழைந்ததும் அவ்வாசல் அடைக்கப்பட்டுவிடும். அதன் வழியாக வேறு எவரும் நுழைய மாட்டார்கள்.சஹ்ல் (ரலியல்லாஹு அன்ஹு) (புகாரி 1896)

ஷஹீதுக்கு முன்பு சுவனம் செல்பவர்....

 عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: كَانَ رَجُلَانِ مِنْ بَلِيٍّ حَيٌّ مِنْ قُضَاعَةَ أَسْلَمَا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَاسْتُشْهِدَ أَحَدُهُمَا، وَأُخِّرَ الْآخَرُ سَنَةً، قَالَ طَلْحَةُ بْنُ عُبَيْدِ اللهِ: فَأُرِيتُ الْجَنَّةَ، فَرَأَيْتُ الْمُؤَخَّرَ مِنْهُمَا، أُدْخِلَ قَبْلَ الشَّهِيدِ، فَتَعَجَّبْتُ لِذَلِكَ، فَأَصْبَحْتُ، فَذَكَرْتُ ذَلِكَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَوْ ذُكِرَ ذَلِكَ لِرَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:" أَلَيْسَ قَدْ صَامَ بَعْدَهُ رَمَضَانَ، وَصَلَّى سِتَّةَ آلَافِ رَكْعَةٍ، أَوْ كَذَا وَكَذَا رَكْعَةً صَلَاةَ السَّنَةِ؟" رواه أحمد، وإسناده حسن.

இரண்டு நபர்கள் நபி(ஸல்)அவர்களிடம் ஒன்றாக இஸ்லாத்தைத் தழுவினார்கள். அவர்களில் ஒருவர் ஷஹிதாகி விட்டார். மற்றொரு நபர் ஒரு வருடம் கழித்து மரணித்தார்.

தல்ஹதுப்னு உபைதில்லாஹ்(ரலி)அவர்கள் சொல்கிறார்கள் :நான் கனவிலே "ஷஹீதை விட (ஒரு வருடம் கழித்து மரணித்த) அந்த நபர் முந்தி சுவனத்தில் நுழையக் காண்டேன்" 

எனக்கு இது ஆச்சரியத்தையளித்தது காலையில் நபி (ஸல்) அவர்களிடம் சென்று அ(க் கனவில் நடந்த)தைக் கூறினேன்.உடனே நபி ஸல் அவர்கள் கேட்டார்கள் :"அவருக்குப் பின்பு (மரணித்த) அந்த நபர் ரமலான் நோன்பை நோற்றிருப்பார்,ஆயிரம் ரகஅத்கள் தொழுதிருப்பார்,இன்னும் ஒரு வருடம் முழுக்க தொழுதிருப்பாரா இல்லையா?" (அது தான் ஷஹிதை விட முந்தி சுவனம் செல்லக் காரணம்)

அறிவிப்பவர் :அபு ஹுரைரா (ரலி)அவர்கள்.(நூல் :அஹ்மத்)  

ரமலானும்,நல்லோர்களும்

وسئل الصحابي عبدالله بن مسعود: «كيف كنتم تسقبلون شهر رمضان؟ قال: ما كان أحدنا يجرؤ أن يستقبل الهلال وفي قلبه مثقال ذرة حقد على أخيه المسلم».

(சஹாபாக்களாகிய) நீங்கள் ரமலான் மாதத்தை எவ்விதம் வரவேற்பீர்கள்? என அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்ட போது  எங்களில் எவரும் (ரமலானுக்கு)பிறைப்பார்க்க செல்லும்போது முஸ்லிமான தன் சகோதரனை குறித்து கடுகளவும்  குரோதம் கொண்டவர்களாக இருக்கமாட்டோம்.

 قال مُعَلَّى بن الفضل: "كانوا يدعون الله ستة أشهر أن  يبلغهم رمضان، ثم يدعونه ستة أشهر أن يتقبله منهم".

முஅல்லா பின் ஃ பள்லு (ரஹ்)அவர்கள் கூறுகிறார்கள்:ஸஹாபாக்கள் ரமலானுக்காக ஆறுமாதங்களும்,ரமலானுக்கு பின் ஆறு மாதங்கள் கபூலிய்யதிற்காகவும் துஆ செய்வார்கள்.

ரமலான் முன் தயாரிப்பிற்காக ஷஃபான் மாதம் அதிகம் நோன்பு நோற்பார்கள்.

 وكان يحيى بن أبي كثير يقول:"اللهم سلمنا إلى  رمضان، وسلم لنا رمضان، وتسلمه منا متقبلا".

 யஹ்யா பின் அபி கஸிர்(ரஹ்)அவர்கள் இவ்வாறு துஆ செய்துக்கொண்டிருப்பார்கள்:"யா அல்லாஹ்! ரமலான் வரை எங்களை ஸலாமத்தாக்கி வை!ரமலானை எங்களுக்கு ஸலாமத்தாக ஆக்கு! எங்களுக்காக ரமலானை ஏற்றுக் கொள்ளப்பட்டதாக ஆக்கு!"

ரமலான் மாத அமல்களின் முக்கியத்துவம்

விவசாயிகளுக்கு அறுவடைக்கால சீசன் மகிழ்ச்சியைத்தருவது போன்று அனைத்து வியாபாரத்திற்கும் லாபங்களை வாரி வழங்கும் ஒரு சீசன் உண்டு. அந்தக் காலங்களில் இரவு, பகல் பாராமல் எப்படி நாம் உழைத்து உலக வருமானத்தைப் பெருக்கிக் கொள்ள முயற்சி செய்கிறோமோ அதைப் போலவே மறுமையில் நாம் நிம்மதியாக இருப்பதற்காக தான் படைத்த பன்னிரண்டு மாதங்களில் இரவு, பகல் 24 மணி நேரமும் நல்ல அமல்களில் ஈடுபடும் ஒரு சீசனாக ரமலானை அல்லாஹ் நமக்கு அருளியுள்ளான்.

يٰٓـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا كُتِبَ عَلَيْکُمُ الصِّيَامُ کَمَا كُتِبَ عَلَى الَّذِيْنَ مِنْ قَبْلِکُمْ لَعَلَّكُمْ تَتَّقُوْنَۙ‏ 

ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் இறையச்சமுடையோர் ஆகலாம்(அல்குர்ஆன் : 2:183)

தங்கம் வெள்ளி பணத்தின் மீதுள்ள மரியாதை நோன்பிற்கும் தெரிந்தால் காலம் முழுவதும் நோன்பு நோற்றிடுவோம்.

மதரஸாக்கள் கோடைகாலங்களில் அல்லாமல் ரமலான் மாதம் விடுமுறை விடப்படுகிறது. மதரஸாக்களில் போதிக்கப்படுகிற குர்ஆன், ஹதீஸ், ஃபிக்ஹ் போன்றவைகள் சிறந்த அமல்களாக இருப்பினும் ரமலானில் நிறைவேற்றப்படகூடிய பிரத்தியேக அமல்களின் முக்கியத்துவம் கருதி மதரஸாக்கள் விடுமுறை விடப்படுகிறது.

 குர்ஆனில் ...فَاِذَا فَرَغْتَ فَانْصَبْۙ‏ எனவே, (வேலைகளிலிருந்து) நீர் ஓய்ந்ததும் (இறைவழியிலும், வணக்கத்திலும்) முயல்வீராக.(அல்குர்ஆன் : 94:7)

அல்லாஹுத்தஆலா நபி (ஸல்) அவர்களை நோக்கி அவர்களின் மற்ற அலுவல்கள் முடிந்ததும் வணக்க வழிபாடுகளுக்கு நேரம் ஒதுக்க பணிக்கிறான்.

நபி (ஸல்) அவர்களின் அலுவல்கள் என்ன?மக்களை நல்வழிப் படுத்துவது, ஜிஹாதில் பங்குகொள்வது,பிரசங்கம் செய்வது போன்ற உயர்ந்த அமல்களாக  இருந்தாலும் அல்லாஹ்வுக்கு ஆற்றவேண்டிய கடமைகளின் பால் கவனம் செலுத்த அல்லாஹ் கட்டளையிடுகிறான். அதனாலேயே நபி (ஸல்) அவர்கள் இரவு நேரங்களில் தம் திருப்பாதங்கள் வீங்கி விடும் அளவுக்கு இறைவனை வணங்குவார்கள் என தஃப்ஸீர் மாரிஃபுல் குர்ஆன் ஆசிரியர் அல்லாமா முஹம்மது ஷஃபி (ரஹ்)அவர்கள் விளக்கம் கூறுவார்கள்.

இமாமுனா மாலிக் (ரஹ்) அன்னவர்களிடம் ஆயிரக்கணக்கானவர்கள் ஹதீஸ் பாடங்களை கற்பார்கள். ஆனால் இமாமவர்கள் ரமலானில் பாடம் நடத்த மாட்டார்கள் அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் لا كلام فيہ الا مع القران    "ரமலான் மாதத்தில் குர்ஆனுடனே தவிர வேறு எவரிடமும் பேச்சு கிடையாது. "

எனவே பருவக் காலத்தில் விரைந்து விற்பனையாகும் பொருட்களை விற்க வியாபாரி சலிப்படைவதில்லை! வியாபாரத்தின் முதலீட்டை அதிகரிக்கத் தயங்குவது மில்லை! தன் தேவைகளைக்கூட சில நேரங்களில் சுருக்கிக் கொள்ளலாம். இது வியாபார நோக்கம். அதுபோல உண்மையான இறையடியான்,  தன் வாழ்வின் வழிகாட்டியாக வந்த இறைத்தூதரின் நன்மொழிகளைப் பற்றிப் பிடித்து ‘மறுமைக்கான’ வியாபாரத்தில் ‘லாபம்’ சம்பாதிக்கவே முனைப்புடனிருப்பான். ரமளானின் ஒரு மணித்துளியையும் வீணாக்க விரும்ப மாட்டான்.

ஆரோக்கியத்தை வழங்கும் வணக்கம் நோன்பு

இம்மாதத்தில் பட்டினியாக கிடப்பது இறைவணக்கமாக இருந்தாலும் அது ஒரு வகையில் மனித வாழ்க்கைக்கு மருந்தாக அமைகின்றது.                ஆம்..மருத்துவர்கள் கூறுகிறார்கள்.. உணவில்லாததால் இறந்து விட்டவர்களை விட வேண்டாத வேளையில் உணவுண்டு இறந்தவர்கள் எண்ணிக்கையே அதிகம்.

முப்பது நாட்கள் நோன்பிருப்பதால் உடல் பலவீனமாகும் என்பது தவறான கருத்தாகும்.

உலகறிந்த உயிரியல் விஞ்ஞானி பேராசிரியர்: ஹக்ஸ்ஸி சில மண் புழுக்களை வைத்து ஆராய்ச்சி செய்தார், அவற்றுக்கு விருப்பமான வழக்கமான உணவை கொடுத்து வந்தார் ஒரே ஒரு மண் புழுவை மட்டும் தனியாக எடுத்து ஒரு வேளை உணவையும் மறு வேளை பட்டினியாக வளர்த்து வந்தார்.

ஆச்சர்யம் என்னவென்றால்...தொடர்ந்து உணவை சாப்பிட்ட மண் புழுக்கள் அழிந்துவிட்டன. ஆனால் ஒரு வேளை பட்டினியாகவும் மறு வேளை உணவு சாப்பிட்டும் வந்த அந்த மண் புழு நீண்ட நாட்கள் வாழ்ந்தது, என்று தனது ஆய்வில் கூறுகிறார்கள்.

தனித்துவமான வணக்கம் நோன்பு 

பொதுவாகவே நோன்பைத் தவிர மற்ற இறைவழிபாடுகள் எல்லாம் ஏதேனும் ஒருவிதத்தில் வெளிப்படையாகவே நிறைவேற்றப்படுகின்றன.

தொழுகையை எல்லோரும் பார்க்க முடியும். ஜகாதிலும் கூட ஒருவர் கொடுப்பதையும், மற்றொருவர் பெறுவதையும்  பார்க்க முடியும்.ஹஜ் குறித்து சொல்லவேண்டியதே இல்லை.அது இலட்சக் காணக்கானவர்களோடு சேர்ந்து நிறைவேற்றபடும் ஓர் வணக்கம்.

ஆனால், நோன்பு இவற்றில் மாறுபட்ட மறைவான தொரு இறைவழிபாடு. நோன்பு நோற்பவரும் இறைவனும் அன்றி வேறு யாரும் அறிந்துகொள்ள முடியாத இறைவழிபாட்டு முறை.

அதனால் தான்  நோன்பிற்கு  அல்லாஹ்வே நேரடியாக கூலி வழங்குகிறான். ஒரு ஹதீஸில்...

روى البخاري (1761) ومسلم (1946) عن أَبي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قال : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ( قَالَ اللَّهُ : كُلُّ عَمَلِ ابْنِ آدَمَ لَهُ إِلا الصِّيَامَ فَإِنَّهُ لِي وَأَنَا أَجْزِي بِهِ . . . الحديث ) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

'நோன்பைத் தவிர ஆதமுடைய மகனின் ஒவ்வொரு செயலும் அவனுக்குரியதாகும்! நிச்சயமாக, நோன்பு எனக்கு(மட்டுமே) உரியது; அதற்கு நானே கூலி கொடுப்பேன்!' என்று அல்லாஹ் கூறினான்,என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.(ஸஹீஹ் புகாரி 1761 &ஸஹீஹ் முஸ்லிம்1946)

இறைகட்டளையை செயற்படுத்தும் முனைப்புடன் ஒருவர் உண்ணாமலும், அருந்தாமலும், மனஇச்சைகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு குறிப்பிட்ட காலம்வரை இருப்பது அசாத்தியமான ஒன்றே எனலாம்.

இப்படி, ஒவ்வோர் ஆண்டும் உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களின் இறைநம்பிக்கைக்கு வைக்கப்படும் தேர்வுதான் நோன்பு.இந்தப் பயிற்சியில் எந்த அளவுக்கு மனிதன் வெற்றியடைந்துகொண்டே போகிறானோ, அந்தளவுக்கு அவனது இறைநம்பிக்கையும் வலுபெறுகிறது.

ரமலானை வரவேற்போம்

முதலில் ரமலானை அடைவதற்காக துஆ செய்வது.அடுத்து ரமலான் பிறை தேடுவது சுன்னத் ஆகும். நபி ஸல் அவர்களும், அவர்களின் தோழர்களும் ரமலானுக்கு மட்டுமல்ல எல்லா மாதங்களும் பிறை பார்ப்பார்கள். பிறை காணும் போது நபி (ஸல்)அவர்கள் கீழ்காணும் துஆவை ஓதுவார்கள். 

عن طلحة بن عبيد الله رضي الله عنه قال: كان النبي صلى الله عليه وسلم إِذا رأى الهِلالَ قال: «اللَّهُمَّ أَهْلِلْهُ عَلَيْنَا بِاليُمْنِ وَالإِيمَانِ وَالسَّلَامَةِ وَالإِسْلَامِ، رَبِّي وَرَبُّكَ اللَّهُ» رواه الترمذي وحسنه (سنن الترمذي؛ برقم: [3526])، 

ரமலானும், நேர மேலாண்மையும்

நாம் வருடம் முழுக்க உலக அலுவல்களுக்காக அதிக நேரங்களை செலவிடுகிறோம். சொற்ப நேரத்தையே அமல்கள் செய்ய ஒதுக்குகிறோம். ரமலான் மாதத்திலாவது நம்முடைய மற்ற அலுவல்களை குறைத்துக்கொண்டு கூடுதல் நேரங்களை ஒதுக்கி , நேர மேலாண்மையோடு அமல்கள் செய்ய முயற்சிக்க வேண்டும்.

முப்பது நோன்புகள் நோற்பதோடு ஐந்து நேரத் தொழுகைகளையும் இமாம் ஜமாத்தோடு தொழ வேண்டும்.

தராவீஹ் தொழுகை : 

ரமலானின் பிரத்தியேக அமல்களில் ஒன்று சுன்னத்தான தராவீஹ் தொழுகை ஆகும். தொழுகை முஃமின்களின் மிஃராஜ் எனப்படும்.குறிப்பாக தொழுகையின்  சுஜூதில் அல்லாஹ்வோடு அடியான் நெருக்கமாகி ஒன்றி விடக்கூடிய ஒர் நிலை ஏற்படுகிறது.

كَلَّا  لَا تُطِعْهُ وَاسْجُدْ وَاقْتَرِبْ‏.    (அவன் கூறுவது போலல்ல;) அவனுக்கு நீர் வழிபடாதீர்; (உம் இறைவனுக்கு) ஸுஜூது செய்து (வணங்கி அவனை) நெருங்குவீராக.(அல்குர்ஆன் : 96:19)

ரமலான் மாதத்தின் தராவீஹ் தொழுகையில் ஒவ்வொரு நாளும் நாற்பது  ஸுஜூதுகள் செய்யும் வாய்ப்பின் மூலம் இப்பெரும்பாக்கியம் நமக்கு கிடைக்கிறது.

குர்ஆன் ஓதுதல் :

குர்ஆன் இறக்கியருளப்பட்டதே இம்மாதம் சிறப்பு பெற காரணம் என 2:185 ஆம் வசனம் கூறுகிறது.

عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ:(( كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَجْوَدَ النَّاسِ، وَكَانَ أَجْوَدُ مَا يَكُونُ فِي رَمَضَانَ حِينَ يَلْقَاهُ جِبْرِيلُ، وَكَانَ يَلْقَاهُ فِي كُلِّ لَيْلَةٍ مِنْ رَمَضَانَ فَيُدَارِسُهُ الْقُرْآنَ، فَلَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَجْوَدُ بِالْخَيْرِ مِنْ الرِّيحِ الْمُرْسَلَةِ ))[ متفق عليه ]

நபி (ஸல்) அவர்கள் மக்களில் அதிகம் கொடைக் கொடுப்பவராக இருந்தார்கள் ரமலான் மாதத்தில் ஜிப்ரயீல் (அலை) அவர்களை சந்திக்கும் சமயத்தில் கொடை வள்ளலாக மாறிவிடுவார்கள். அவர்(ஜிப்ரயீல்) ரமலான் மாதத்தில் ஒவ்வொரு இரவும் நபியை சந்தித்து குர்ஆன் ஓதிக்காட்டுவார்.  நபி அவர்களை ஜிப்ரீல் (அலை) அவர்கள் சந்திக்கின்றபோது தொடர்ந்து வீசும் புயல்காற்றைவிட (வேகமாக) நல்லதை வாரி வழங்குவார்கள்.அறிவிப்பவர் :இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் (நூல் :புகாரி, முஸ்லிம் )

நபி ஸல் அவர்கள்  மரணித்தை தழுவிய  அவ்வாண்டு ஜிப்ரயீல் (அலை )அவர்கள் ரமலானில் இரண்டு தடவைகள் குர்ஆன் ஓதிக் காட்டினார்கள் என பாத்திமா ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் ஒரு ரிவாயத் உள்ளது.இந்த மாதம் குர்ஆன் ஓதுவதும், குர்ஆன் ஓதுவதை கேட்பதும், இரண்டுமே சிறப்புக்குரிய அமல்கள் ஆகும். 

இமாமுனா அபூஹனிபா(ரஹ்) அன்னவர்கள் :ரமலானில் ஒவ்வொரு நாளும் பகலில் ஒரு குர்ஆனும்,இரவில் ஒரு குர்ஆனையும் இப்படி மொத்தம் அறுபது குர்ஆன்களை ரமலானில் ஓதிவிடுவார்கள்.

فقد كان سفيان الثوري إذا دخل رمضان ترك جميع  الأعمال، وأقبل على قراءة القرآن.

சுஃப்யான் சவ்ரி (ரஹ்)அவர்கள் :ரமலான் மாதத்தில் எல்லா காரியங்களையும் விட்டு விட்டு குர்ஆன் ஓதுவதில் ஈடுபடுவார்கள். 

  وكان محمد بن إسماعيل البخاري يختم في رمضان  في النهار كل يوم ختمة، ويقوم بعد التراويح كل ثلاث ليالٍ بختمة

இமாம் முஹம்மத் பின் இஸ்மாயில் அல் புகாரி  (ரஹ்)அவர்கள் ரமலானில் ஒவ்வொரு நாளும் பகலில் ஒரு குராஆனையும்,தராவீஹ் தொழுகைக்குப் பின்னால் (ஒரு நாளைக்கு பத்து ஜூஸ்வு என்று) மூன்று நாளில் முழு குர்ஆனை தொழுகையில் ஓதி முடிப்பார்கள்.

ஹுஜ்ஜதுல் இஸ்லாம் மௌலானா காஸிம் நானுத்தவி (ரஹ்) அவர்கள்: ஹிஜ்ரி1277ஆம் ஆண்டு ரமலான் மாத ஹிஜாஸ் பயணத்தில் ஒவ்வொரு ஜுஸ்வுகளாக குர்ஆன் முழுவதையும் மனனம் செய்து ஹாஃபிளாகி விட்டார்கள்.

ரமலான் மாத தராவீஹ் தொழுகையில் அதிகளவு குர்ஆன் ஓதி தொழவைப்பார்கள். என ஷைகுல் ஹதீஸ் ஜகரிய்யா (ரஹ்)அவர்கள் தனது நூலில் குறிப்பிடுகிறார்கள்.

 நஃபிலான வணக்கங்கள்:

ரமலானில் நஃபிலான தொழுகைகளில் அதிகம் கவனம் செலுத்தலாம்.குறிப்பாக தஹஜ்ஜுத் தொழுகை, ஸஹர் செய்ய எழுந்திருக்கும் போதே தஹஜ்ஜுத் தொழுது முடித்து ஸஹர் செய்வது பெரும் சிரமமான காரியம் ஒன்றுமில்லை.பகலில் இஷ்ராக்.ளுஹா போன்ற தொழுகைகளையும்.மக்ரிபுக்கு பின்னால் அவ்வாபீன் தொழுகைகளிலும் கவனம் செலுத்தலாம்.

ஃபகீஹுல் உம்மத் ஹழ்ரத் முஃப்தி மஹ்மூதுல் ஹஸன்(ரஹ்)அவர்கள்: தாருல் உலூம் தேவ்பந்த் மதரஸாவில் தலைமை முஃப்தியாக இருந்தவர்கள். ரமலான் மாதம் வந்துவிட்டால் ஹஜ்ரத் அவர்கள் மிகுந்த ஆர்வத்தோடு தஹஜ்ஜுத் இஷ்ராக்,அவ்வாபீன், ளுஹா ஆகிய நபிலான தொழுகைகளையும் சுன்னத்தான தொழுகைகளில்  மிக நீளமாக குர்ஆன் ஒதித் தொழுபவர்களாக இருந்தார்கள்.

ஜகாத் மற்றும் ஸதகாக்கள்:

இரட்டிப்பு நன்மை என்பதால் செல்வந்தர்கள் ரமலான் மாதம் கணக்குப் பார்த்து ஜகாத் கொடுக்கிறார்கள். அதேபோல இம்மாதத்தில் அதிக தானதர்மங்களை செய்யவும் நபி (ஸல்) அவர்கள் ஆர்வமூட்டி உள்ளார்கள். ஹதீஸில் வருகிறது,

(( كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَجْوَدَ النَّاسِ، وَكَانَ أَجْوَدُ مَا يَكُونُ فِي رَمَضَانَ حِينَ يَلْقَاهُ جِبْرِيلُ 

"நபி (ஸல்)அவர்கள் மிகுந்த தயாள குணம் உள்ளவர்களாக இருந்தார்கள், ரமலான் மாதத்தில் கொடை வள்ளலாக மாறிவிடுவார்கள். "

• قال الإمام الذهبي:"وبلغنا أن حماد بن أبي سليمان كان ذا دنيا متسعة، وأنه كان يُفطِّر في شهر رمضان خمس مائة إنسان، وأنه كان يعطيهم بعد العيد لكل واحد مائة درهم

இமாம் தஹ்பி (ரஹ்)அவர்கள் கூறுகிறார்கள்:ஹம்மாத் பின் அபி ஸுலைமான் என்ற செல்வந்தர் ஒருவர் இருந்தார்.

அவர் ரமலான் மாதத்தில் ஐநூறு நபர்கள் இஃப்தார் செய்வதற்கு ஏற்பாடு செய்வார்.அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஈதுக்கு பின்னால் நூறு திர்ஹம்கள் தானமாக கொடுப்பார்.

தான தர்மங்களில் மிகச் சிறந்தது, நோன்பாளிக்கு நோன்பு திறக்க ஏற்பாடு செய்வது.

رسول اللہ صلی اللہ علیہ وسلم قال:مَن فَطَّرَ صائِماً کانَ لہُ مَثلُ اجرِہِ غَیرَ انہُ لا یَنقُصُ مِن اَجرِ الصائِم شَیئًا                  இது பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியிருக்கிறார்கள்;"யாரேனும் ஒருவர், ஒரு நோன்பாளியை நோன்பு துறக்கச் செய்வாரேயானால், அந்த நோன்பாளி செய்த அனைத்து நன்மைகளின் அளவு இவருக்கும் கிடைக்கும். ஆனாலும், நோன்பு துறந்தவருடைய நன்மைகளில் சிறிதளவேனும் குறைக்கப்பட மாட்டாது" (அல் - ஹதீஸ்)

பாவங்களை விட்டும் பரிசுத்தமானவர்களாக:சொல்,செயல்,சிந்தனை ஆகிய அனைத்துப் பாவங்களை விட்டும் பரிசுத்தமாகி தூய எண்ணத்துடன் ரமலானில் நுழையவேண்டும்.

عن أبي هريرة رضي الله عنه أن النبيَّ صلى الله عليه وسلم قال: ((مَن لم يَدَعْ قول الزُّور والعملَ به والجهلَ، فليس للهِ حاجةٌ أن يَدَعَ طعامه وشرابه))؛ رواه البخاري[1].

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் ”பொய்யான பேச்சையும் பொய்யான நடவடிக்கைகளையும்விட்டு விடாதவர் தம் உணவையும் பானத்தையும்விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை!” என அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் கூறினார்கள். .(நூல்: புஹாரி)

துஆ எனும் பிரார்த்தனை:

ரஹ்மதை வாரி வழங்கும் மாதம்,துஆ ஒப்புக்கொள்ளப்படும் மாதம். எனவே அதிகமதிகம் துஆ செய்யலாம்,காலை, மாலை வேலைகளிலும்,சஹர் இஃப்தார் சமயங்களிலும், ஐவேலை தொழுகைகளுக்கு பின்னாலும் துஆக்கள் ஒப்புக்கொள்ளப்படும்.

திக்ர் செய்தல்:

ரமலானில் நிற்கும் போதும், நடக்கும் போதும், அமரும் போதும், உறங்கும் போதும், எல்லா நிலைகளிலும் திக்ரு செய்வதை வழமையாக்கிக் கொள்ளலாம்,

سبحان الله-لاحول ولا قوة الا بالله- لااله الا الله- الحمد لله- الله اكبر ஆகிய இலகுவான திக்ர்களையும்,ஸலவாத்துகளையும் ஓதலாம்.

லைலதுல் கத்ர்&இஃதிகாஃப்:

ரமலான் கடைசி பத்து தினங்கள்  இஃதிகாஃப் இருப்பது சிறப்பானது. காரணம் கடைசிப் பத்தின் ஒற்றைப்படை இரவுகளில் ஆயிரம் மாதங்களை விட சிறந்த லைலத்துல் கத்ர் இரவு மறைக்கப்பட்டுள்ளதால் இஃதிகாஃப் இருப்பவருக்கு அந்த இரவின் முழு நன்மையும் கிடைத்துவிடுகிறது. 

முஜத்திது அல்ஃப தானி (ரஹ் )அவர்கள் சொல்வார்கள்:மற்ற மாதங்கள் பரகத்தின் பனித்துளிகள் என்றால் ரமலான் மாதம் பரகத்தின் கடல் போன்றதாகும்.

இறையடியானுக்கு ஒவ்வொரு மாதமும் இறையருள் பொழியும் மாதம்தான். ஆனால், ரமளானில் இறையருள் அடைமழையாய் பொழியும்போது அதை அலட்சியப்படுத்தி விடக்கூடாது.

எனவே அல்லாஹ் நம் அனைவருக்கும் ரமலானின் பாக்கியங்களை அடையும் நற் கிருபையைச் செய்வானாக! லாக் டவுன் இல்லாத ரமலானை தருவாயாக ! யா அல்லாஹ் ..ஆமீன்...

No comments:

Post a Comment