Chengaiulama.in

Thursday, 13 April 2023

ஜும்ஆ பயான் 14/04/2023

இறுதி பத்து நாட்கள்.

ரமலானின் இறுதி பத்து தினங்களில் இஸ்லாமியர்கள் இரவு பகலாக அமல் செய்வதற்குறிய சிறந்த பொழுதுகளாகும்.ரமலான் மாதம் முழுக்கவே சிறப்பு கூறிய நாட்களாக இருந்தாலும் கடைசி பத்து தினங்கள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

ரமலானில் 20 தினங்கள் கழிந்ததற்கு பின்னால் மீதமுள்ள பத்து தினங்களில் ஒவ்வொரு நிமிடத்தையும் சிறந்த வாய்ப்பாக கருதி அமல்செய்யவேண்டும். ரமலான் மாதத்தின் கடைசி பத்து தினங்களை சிறப்பாக்கும் காரணங்கள்.

நரக விடுதலை அளிக்கும் பத்து.

ஹதீஸ்களில் புனித ரமலான் மாதம் குறித்து பல்வேறு சிறப்புகள் கூறப்பட்டுள்ளன. ஒரு ஹதீஸில் ஒவ்வொரு பத்து தினங்களுக்கும் தனித்தனி சிறப்புகளை கூறப்படும்.

ஒவ்வொரு பத்துதினங்களிலும் அல்லாஹ் தம் அடியார்களுக்கு தனித்துவமான அருளை புரிகிறான்.

رَمَضَانَ أوَّلُه رحمةٌ، و أوسطُهُ مغفرةٌ، وآخرُهُ عِتقٌ منَ النَّارِ.

(صحیح ابن خزیمه، حدیث نمبر: 1780)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ரமலானின் முதல் பத்து நாட்கள் அல்லாஹ்வின் 'ரஹ்மத்' எனும் அருட் கொடையாகவும் நடுப் பத்து நாட்கள் 'மக்ஃபிரத்' எனும் பாவமன்னிப்புக் குரியதாகவும் கடைசிப் பத்து நாட்கள் நரகத்திலிருந்து 'நஜாத்' மீட்சியளிக்கக் கூடியதாகவும் உள்ளது.

இறுதி பத்து தினங்களும், அண்ணலம் பெருமானார்ﷺ அவர்களும்.

கண்மணி நாயகம் பெருமானார்ﷺஅவர்களின் இரவு பகல்,  வருடம் முழுக்க இறை தியானத்திலும்,இறை சிந்தனையிலும் வணக்க வழிபாடுகளிலும் கழியும்.இரவு வேளையில் உலகமே இறை சிந்தனை மறந்து உறக்கத்தில் ஆழ்ந்திருக்க கண்மணி நாயகம்ﷺஅவர்கள் தங்களை இறை வணக்கத்தில் ஈடுபடுத்திக் கொண்டிருப்பார்கள்.தஹஜ்ஜுத் தொழுகையில் சூரா பகரா,சூரா ஆல இம்ரான்,சூரா நிஸா போன்ற பெரும் சூராக்களை ஓதி தங்கள் பாதங்கள் வீங்கிடும் அளவுக்கு வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவார்கள்.

இதுவே ரமலான் மாதத்தில் நாயகம் ﷺஅவர்களுக்கு அமல் செய்யும் தேட்டம்,பன்மடங்கு அதிகமாகிவிடும்.

குறிப்பாக கடைசி 10 தினங்கள் நாயகம் ﷺஅவர்களின் அமல்கள் குறித்து ஹதீஸிலே வருகிறது...

کَانَ یَجْتَهِدُ فِی الْعَشَرِ الْاَخِیْرِ مَالَا یَجْتَهِدُ فَی غَیْرِه.

(صحیح مسلم، حدیث نمبر: 1175)

நபி  ﷺஅவர்கள் மற்ற மாதங்களில் வணக்க வழிபாடு விஷயத்தில் ஆர்வம்காட்டாத அளவு ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் அதிக அளவில் வணக்கவழிபாடுகளில் ஈடுபடுவார்கள்.அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)நூல்: முஸ்லிம்.

«كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا دَخَلَ العَشْرُ شَدَّ مِئْزَرَهُ، وَأَحْيَا لَيْلَهُ، وَأَيْقَظَ أَهْلَهُ»

ரமலானுடைய கடைசி பத்து வந்துவிட்டால் முழு இரவிலும் இபாதத் செய்வார்கள். தனது குடும்பத்தாரையும் அவர்கள் தூங்க விடமாட்டார்கள் (எழுப்பி விடுவார்கள்). தன்னுடைய கீழ் ஆடையை இருக்க கட்டிக்கொள்வார்கள்.

புனித மிக்க ரமழான் மாதத்தின் இறுதிப்பத்தை நாம் அடைந்திருக்கும் இவ்வேலையில் இந்த இறுதிப்பத்தின் மகத்துவத்தையும், கண்ணியத்தையும் மிகவும் தெளிவாகவும், ஆழமாகவும் விளங்கிக்கொள்ள வேண்டும்.

ரமலானில் இரவுத் தொழுகை.

عَنْ أَبِي هُرَيْرَةَ ، أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ

مَنْ قَامَ رَمَضَانَ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ

யார் நம்பிக்கை கொண்டு (நற்கூலியை) எதிர்பார்த்து ரமளான் மாதத்தில் நின்று வணங்குகின்றாரோ அவரது முந்தைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு விடும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி-37

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் ஒருவர் கனவு கண்டால் அதை நபி (ஸல்) அவர்களிடம் எடுத்துரைப்பது வழக்கம். நானும் ஒரு கனவு கண்டு, அதை நபி (ஸல்) அவர்களிடம் எடுத்துரைக்க ஆசைப்பட்டேன். அப்போது நான் இளைஞனாகவும் பள்ளிவாசலில் உறங்கக் கூடியவனாவும் இருந்தேன். இரண்டு மலக்குகள் என்னைப் பிடித்து நரகத்திற்குக் கொண்டு சென்றார்கள். கிணற்றுக்குச் சுவர் கட்டப்பட்டது போல் அந்த நரகத்திற்கும் கட்டப் பட்டிருந்தது. அதற்கு இரண்டு கொம்புகள் இருந்தன. இதில் எனக்குத் தெரிந்த சில மனிதர்களும் கிடந்தனர். அப்போது நான் நரகத்தை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுகின்றேன் என்று கூறினேன். அப்போது வேறு ஒரு மலக்கு என்னைச் சந்தித்து நீர் பயப்படாதீர் என்று கூறினார். இவ்வாறு நான் கனவு கண்டேன். இக்கனவை ஹஃப்ஸா (ரலி) யிடம் கூறினேன். அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அப்துல்லாஹ் இரவில் தொழுபவராக இருந்தால் அவர் மனிதர்களிலேயே மிகவும் நல்லவர்!” என்று கூறினார்கள். அதன் பின்னர் குறைந்த நேரமே தவிர நான் உறங்குவதில்லை.

(அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி), நூல் : புகாரி-1121)


இஃதிகாஃப்.

நாயகம்ﷺஅவர்கள் கடைசி பத்தில் மேற்கொள்ளும் அமல்களில் இன்னொரு முக்கியமான அமல் இஃதிகாஃப் ஆகும். 

کانَ یَعْتَکِفُ العَشْرَ الأوَاخِرَ مِن رَمَضَانَ، حتَّی تَوَفَّاهُ اللّٰهُ عَزَّ وَجَلَّ، ثُمَّ اعْتَکَفَ أَزْوَاجُهُ مِن بَعْدِهِ. (متفق علیه)

அன்னை ஆயிஷா (ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள்:நாயகம்ﷺஅவர்கள்மரணத்தை தழுவும் வரை ரமலானின் கடைசி பத்து தினங்கள் இஃதிகாப் இருப்பார்கள்.அவர்களுக்குப் பின்னால் அவர்களின் மனைவியர்கள் இஃதிகாப் இருந்தார்கள்.

இஃதிகாப் இருப்பவர் பாவங்களை விட்டும் பாதுகாக்கப்படுகிறார்; நற்செயல் கள் அனைத்தையும் செய்பவரைப் போன்ற நன்மைகள் அவருக்கு எழுதப்படுகின்றன என நபி  ﷺஅவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: இப்னுமாஜா)

எவர் ரமலானின் இறுதி பத்து நாட்கள் இஃதிகாஃப் இருப்பாரோ அவருக்கு இரண்டு ஹஜ்,இரண்டு உம்ரா செய்த நன்மை கிடைக்கும்(நபிமொழி)

முஃமினான அடியான் இஃதிகாபில் உலக தொடர்புகளை துண்டித்து விட்டு இறை இல்லத்தில் அல்லாஹுகாக  தனித்திருந்து தொழுகை,திக்ரு,திலாவத் போன்ற அமல்களில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறான்.அவனின் தூக்கமும் இஃதிகாபில் வணக்கம் ஆகிறது. 

லைலதுல் கத்ரு.

லைலதுல் கத்ரு மகத்துவமிக்க ஓர் ஒப்பற்ற இரவாகும்.உம்மதே முஹம்மதிய்யாவிற்கு மட்டும் கிடைக்கப்பெற்ற பேருபகாரமாகும். 

லைலத்துல் கத்ர் لیلۃ القدر என்பதற்கு "கண்ணியமான" "சிறப்பான"இரவு என்று பொருளாகும். இந்த இரவில் நின்று வணங்குபவர்கள் அல்லாஹ்விடம் கண்ணியத்தையும்,சிறப்பையும் பெற்வர்களாக ஆகிறார்கள். 

இந்த இரவுக்கு எதனால் قدر கத்ரு என பெயர் வைக்கப்பட்டுள்ளது என்ற சூட்சுமத்தை அல்லாஹ்வே நன்கறிந்தவன்.இந்த இரவின் சிறப்பை அல்லாஹ் தனது மறையில் இவ்விதம் கூறுகிறான்.

اِنَّاۤ اَنْزَلْنٰهُ فِىْ لَيْلَةِ الْقَدْرِ  ‏

நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம்.             (அல்குர்ஆன் : 97:1)

وَمَاۤ اَدْرٰٮكَ مَا لَيْلَةُ الْقَدْرِ‏

மேலும் கண்ணியமிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது?(அல்குர்ஆன் : 97:2)

لَيْلَةُ الْقَدْرِ  ۙ خَيْرٌ مِّنْ اَلْفِ شَهْرٍ‏

கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக்க மேலானதாகும்.(அல்குர்ஆன் : 97:3)

تَنَزَّلُ الْمَلٰٓٮِٕكَةُ وَالرُّوْحُ فِيْهَا بِاِذْنِ رَبِّهِمْ‌ مِّنْ كُلِّ اَمْرٍ ۛۙ‏

அதில் மலக்குகளும், ஆன்மாவும் (ஜிப்ரீலும்) தம் இறைவனின் கட்டளையின் படி (நடைபெற வேண்டிய) சகல காரியங்களுடன் இறங்குகின்றனர்.(அல்குர்ஆன் : 97:4)

سَلٰمٌ   ۛهِىَ حَتّٰى مَطْلَعِ الْفَجْرِ‏

சாந்தி (நிலவியிருக்கும்); அது விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும்.(அல்குர்ஆன் : 97:5)

லைலதுல் கத்ர் இரவில் வணக்கவழிப்பாடுகள் செய்வதன் சிறப்பை நாயகம்ﷺஅவர்கள் பல ஹதீஸ்களில் கூறியுள்ளார்கள்.

مَن قَامَ لَیلۃَ القَدرِ إیمانًا واحتِسابًا، غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِن ذنبِهِ. (متفق علیه)

லைலத்துல் கத்ர் இரவில் அல்லாஹ்வை ஈமான் கொண்டவராகவும் நன்மையை எதிர்பார்த்தவராகவும் யார் நின்று வணங்குகின்றாரோ அவரின் முன் பாவங்கள் மன்னிக்கப்படும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)

மேற்கூறிய ஹதீஸில் இவ்விரவின் சிறப்பை கூறிய நாயகம்ﷺஅவர்கள் மறைக்கப்பட்ட இந்த இரவை தேடி பல இரவுகள் அமல் செய்திருக்கிறார்கள்.

இந்த உம்மத்தை கடைசி பத்து தினங்களில் ஒற்றை படை இரவுகளில் இவ்வரவை தேடி அமல் செய்யுமாறு ஆர்வமூட்டியுள்ளார்கள்.

تَحرُّوا لیلۃَ القَدْر فی العَشْر الأواخِر من رمضانَ. (بخاری، حدیث نمبر: 2020)

ரமளான் மாதத்தின் கடைசிப் பத்து நாட்களில் லைலத்துல் கத்ரின் இரவை தேடிப் பெற்றுக்கொள்ளுங்கள், என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)

تَحرُّوا لَیلۃَ القَدْرِ فی الوَتْر من العَشرِ الأواخِرِ من رمضانَ.

(بخاری، حدیث نمبر: 2017)

ரமளான் மாதத்தின் கடைசிப் பத்தின் ஒற்றைப்படை நாட்களில் லைலத்துல் கத்ரின் இரவை தேடிப் பெற்றுக்கொள்ளுங்கள், என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)

லைலத்துல் கத்ர் போன்ற ஒரு இரவை வேற எந்த உம்மத்தினருக்கும் வழங்கப்படவில்லை.இந்த உம்மத்திற்கு லைலத்துல் கத்ர் எதனால் வழங்கப்பட்டது என்று  நாயகம்ﷺஅவர்கள் கூறும்போது 

إنَّ رسولَ اللّٰهِ أُرِیَ أعمارَ الناسِ قبلَه أو ما شاءاللّٰهُ من ذلک فکأنه تقاصر أعمارَ أُمَّتِه ألَّا یَبلُغوا من العملِ مثلَ الذی بلغ غیرُهم فی طولِ العمُرِ، فأعطاه اللّٰهُ لیلةَ القدرِ خیرًا من ألفِ شهرٍ.

(موطا امام مالک، 1: 319)


நாயகம்ﷺஅவர்களுக்கு முன் வாழ்ந்த மனிதர்களின் வயதுகளை காட்டப்பட்டது.தம் உம்மத்தினரின் வயது அவர்களை விட குறைவாக இருப்பதையும்,நீண்ட ஆயுளில் அவர்களின் அமல்களின் அளவு தங்களின் உம்மத்தினர் அமல்களை செய்ய இயலாது என்று எண்ணிய போது, அல்லாஹுதஆலா ஆயிரம் மாதங்களை விட சிறந்த லைலதுல் கத்ர் இரவை (இந்த உம்மத்திற்கு)வழங்கினான்.

இந்த இரவு வேறெந்த சமுதாயத்திற்கும் வழங்கப்படவில்லை. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் சமுதாயத்திற்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

‘பனூ இஸ்ராயீலைச் சார்ந்த ஒரு மனிதர் இரவு முழுவதும் நின்று வணங்குவார். காலை உதயமானதும் மாலை வரை எதிரியைச் சந்திக்க போர்க்களம் சென்று போராடுவார். இவ்வாறு அவர் ஆயிரம் மாதங்கள் ஈடுபட்டார்’ என முஜாஹித் (ரஹ்) கூறுகிறார்.

ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள் கூறும் போது ‘பனூ இஸ்ரவேலர்களைச் சார்ந்த அய்யூப் (அலை), ஸகரிய்யா (அலை), ஹிஸ்கீல் (அலை), யூஷஃபின்நூன் (அலை) ஆகிய நால்வரும், 80 வருடங்கள் கண்ணிமைக்கும் நேரம் கூட இறைவனுக்கு மாறு செய்யாத வண்ணம் இறைவணக்கம் புரிந்து வந்தார்கள்’ என்று தெரிவித்தார்கள்.

இதைக் கேள்விப்பட்ட நபித்தோழர்கள் ஆச்சரியத்தில் உறைந்து போனார்கள்.

உடனே வானவர் ஜிப்ரீல் (அலை) நபிகளாரிடம் இறங்கிவந்து ‘உங்களது சமுதாயம் இந்த நால்வரைக் கண்டு ஆச்சரியப்படுகிறார்கள். எனவே இதைவிட சிறந்த ஒரு பாக்கியத்தை இறைவன் இறக்கி அருள்பாலித்திருக்கிறான்’ என்று கூறி பின்வரும் லைலத்துல்கத்ர் சம்பந்தமான அத்தியாயத்தை கூறினார்கள். (அறிவிப்பாளர்: அலி பின் உர்வா (ரஹ்)

லைலதுல் கத்ரில் கேட்கவேண்டிய துஆ.

கடைசி பத்து தினங்களில் நரக விடுதலை,மற்றும் இறைநெருக்கம் பெற ஓதும் துஆக்களை நாயகம்ﷺஅவர்கள் கற்றுத்தந்திருக்கிறார்கள். 

قلتُ یا رسولَ اللّهِ أرأیتَ إن عَلِمْتُ أیُّ لَیلةٍ لَیلةُ القَدرِ ما أقولُ فیها؟ قالَ: قولی: اللَّهمَّ إنَّکَ عفوٌّ کَریمُ تُحبُّ العفوَ فاعْفُ عنِّی.

(الترمذی، حدیث نمبر: 3513)

“இறைத்தூதர் ﷺஅவர்களே, ‘நான் லைலத்துல் கத்ரை பெற்று விட்டால் என்ன பிரார்த்தனை புரிய வேண்டும்?’ என ஆயிஷா (ரலி) நபிகளாரிடம் கேட்டார்கள். அதற்கு நபிகளார் ‘இறைவா, நீ மன்னிப்பவன். நீ மன்னிப்பை விரும்புகிறவன். எனவே நீ என்னை மன்னிப்பாயாக என்று நீ கேட்பீராக’ என்று இவ்வாறு கூறினார்கள்”. (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி), நூல்: இப்னுமாஜா)


ஸதகதுல் ஃபித்ர்

இறுதிப் பத்தில் முக்கியமான ஒரு வணக்கம் ஸதகதுல் ஃபித்ர் ஆகும். இது 612 கிராம் 360 மில்லி கிராம் வெள்ளியோ அல்லது அதன் கிரையத்தையோ சொந்தமாக வைத்திருப்பவர்களின் மீது கடமையாகும்.இதனை இது தொழுகைக்கு முன்னால் கொடுத்து விட வேண்டும்.ஏழை எளியவர்களும், வரியவர்களும் தங்களின் தேவைகளை பூர்த்தி செய்து நம்மோடு மகிழ்ச்சியாக ஈது பெருநாளில் பங்கேற்பதற்காக கடமையாக்கப்பட்டதாகும்.

انَّ رسولَ اللّٰهِ صلَّی اللّٰهُ علیهِ وسلَّمَ فرضَ زَکاةَ الفِطرِ من رمضانَ صاعًا من تمرٍ أو صاعًا من شعیرٍ علی کلِّ حرٍّ أو عبدٍ ذَکرٍ أو أنثی منَ المسلمینَ.

(جامع الترمذی)

நாயகம்ﷺஅவர்கள் ரமலான் மாதத்தில்  முஸ்லிம்களில் சுதந்திரமானவரோ அல்லது அடிமையோ,ஆணோ அல்லது பெண்ணோ ஒவ்வொருவரின் மீதும் பேரீத்தம் பழத்திலிருந்து ஒரு படியையோ அல்லது தொளி  கோதுமையில் இருந்து ஒரு படியையோ ஸதக்கத்துல் பித்ராக கொடுப்பதை கடமையாக்கினார்கள்.

ஃபித்ரா விபரம்:      

ஹனஃபி;  1 கிலோ 633 கிராம் கோதுமை அல்லது அதற்கான கிரயம் இவ்வாண்டு அதன் கிரயம் ரூபாய்  90/-  என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது

ஷாஃபிஈ: 2 கிலோ 400 கிராம் கோதுமை அல்லது அரிசி பொருளாக மட்டும் கொடுக்கவேண்டும்.கிரயம் கொடுக்க கூடாது.  (ஜமாஅத்துல் உலமா சபை)

கோடை வெப்பமும் நரகின் வெப்பமும்.

கோடை வெயில் அனலை அள்ளிக் கொட்டுகிறது. பாதைகளில் பயணிக்கும் மக்கள், அடிக்கடி அதன் ஓரத்தில் நிம்மதி நாடி நிழல் தேடி ஓய்வுக்காக ஒதுங்குகிறார்கள். சாமானியர்கள், செல்வச் சீமான்கள் என்று எந்தவொரு வித்தியாசமும் இல்லாமல் எல்லோரும் தங்களது சக்திக்கேற்ப, வாட்டியெடுக்கும் வெயிலில் இருந்து பாதுகாக்கும் வசதிகளின் பக்கம் படையெடுக்கிறார்கள்.

கடைத்தெருக்களுக்கு வழக்கமாக வெளியே வந்து செல்கின்றவர்களை விட அதிகமான மக்கள், வெயிலின் காரணமாக மின்விசிறிகளுக்குக் கீழே முடங்கிக் கிடக்கிறார்கள். நிழலின் அருமை வெயிலிலே தெரியும் எனும் பழமொழியை நாமெல்லாம் தெரிந்து வைத்திருப்போம். இருப்பினும், அதன் உண்மையான விளக்கத்தை அதன் அருமையை இப்போது நாம் அனுபவ ரீதியாக உணர்கிறோம்.

அதுவும் இந்த ரமலானில் வெயிலின் வெப்பம் வேகமாகத் தாக்குவதால் தேகம் வியர்வையைச் சிந்திச் சிந்தி சோர்வடைந்து விடும். இந்தத் தருணத்தில் நரகத்தின் வேதனையும் சொர்க்கம் அருமையை பற்றியும் தெரிந்து கொள்வோம்.

நரகம்...

திருக்குர்ஆனில் நரகம் குறித்து எச்சரிக்கை செய்யப்பட்ட அளவிற்கு வேறு எது குறித்தும் எச்சரிக்கைப்படவில்லை. நரகத்தின் அத்துனை நிலைகளையும்,தன்மைகளையும் கண்ணுக்கு முன் கொண்டுவரும் காட்சிகள் திருக்குர்ஆனில் ஏராளமாக உள்ளன.

திருக்குர்ஆனில்   نار   என்ற வார்த்தை 121 வசனங்களில் இடம் பெறுகிறது.

جهنم  என்ற வார்த்தை 77 வசனங்களில் இடம்பெறுகிறது.அதை போல سعير  வார்த்தை 26 வசனங்களில் இடம்பெறுகிறது.

இவ்வாறு நரகம் குறித்த வார்த்தைகள் அதிகமாக திருக்குர்ஆனில் பயன்படுத்தப்பட்டிருப்பதின் மூலம் அதன் ஆபத்துக்களை உணர்ந்து கொள்ள முடியும்.

பாவத்திலிருந்து முழுமையாக பாதுகாக்கப்பட்ட கண்மணி முஹம்மது ஸல் அவர்கள் நரகத்தை விட்டும் பாதுகாப்பு தேடாத நாட்கள் இல்லை.அப்படியானால் நம் போன்றவர்களின் நிலை குறித்து என்ன சொல்வது?

நரகம் அச்சத்தின் மொத்த உருவம்.மரணத்தையே மரணமாக்கிவிடும். பார்ப்பவர்களின் பார்வைகளையும் இதயங்களையும் குழை நடுங்கச்செய்து விடும். அல்லாஹ்வின் கோபத்தின் மொத்த காட்சிகள்.நெருப்பே நெருப்பிலிருந்து பாதுகாப்பு தேடும் விந்தை!

ஒவ்வொரு மனிதனுக்கும் சுவர்க்கம் மற்றும் நரகத்தின் முன் காட்சிகள் (டிரைலர்) மரணத்திலும் மண்ணரையிலும் காட்டப்படும்.நரகத்தை விட்டும் பாதுகாக்கப்பட்டு சுவனத்தில் நுழையும் அந்த நாள் உண்மையில் வெற்றிக்குறிய நாளாகும் என்று திருக்குர்ஆன் புகழ்ந்து கூறுகிறது.

பொதுவாக நரகம் குறித்து எச்சரிக்கப்படும் போதெல்லாம் ஒரு முஃமினுக்கு ஷைத்தான் ஒரு வித மோசடியான நம்பிக்கையை தருவான்.அது என்னவென்றால் என்றாவது ஒரு நாள் சுவனம் சென்று விடலாம் தானே!

ஆம்! முஃமினான யாவரும் இன்ஷா அல்லாஹ் சுவனம் செல்வோம்.ஆனால் நரகத்தின் குறைந்த பட்ச நாள் என்பது ஒரு ஹுக்ப்.حقب

ஒரு حقب என்பது நாற்பது ஆண்டுகள் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.  அப்படியானால் நரகத்தில் கால்வைத்துவிட்ட ஒருவர் அதிலிருந்து வெளியேர குறைந்தபட்சம் நாற்பது ஆண்டுகள் ஆகும்.(அந்த கொடிய நரகை விட்டும் அல்லாஹ் நம் எல்லோரையும் பாதுகாப்பானாக. ஆமீன்.)

நிழலும் அருட்கொடையே!

நாம் நிம்மதியாக வாழ வேண்டும் என்பதற்காக நித்திய ஜீவனான அல்லாஹ்வே இந்த நிழலை ஏற்படுத்தியிருக்கிறான். வெறும் வெயிலை மட்டும் கொடுத்து நம்மை வேதனையில் தள்ளிவிடாமல் அதிலிருந்து இதமளிக்கும் நிழலையும் தந்து அவன் நம் மீது கருணை மழையைப் பொழிந்திருக்கிறான். நமது நலனுக்காக அவன் அளித்திருக்கும் அளவிலா அருட்கொடைகளில் இந்த நிழலும் உள்ளடங்கும்.

இந்த உலகத்தில் தரப்பட்டிருக்கும் இன்பங்களைப் பற்றி மறுமைநாளில் விசாரிக்கும் போது, நிழல் தொடர்பாகவும் நம்மிடம் விசாரிக்கப்படும், அலை அலையாய் வரும் ஆதவனின் அக்னி கதிர்கள் ஆவேசமாக தீண்டும் வேளையில் நமக்கு ஆறுதல் அளிக்கும் இந்த நிழல் இன்பத்தைப் பற்றியும் நிச்சயமாக நாம் பதில் சொல்லியாக வேண்டும். வெயிலின் போது பல்வேறு விதமான நிழல்களில் இளைப்பாறும் நாம் இதை ஒருபோதும் மறந்துவிடக்கூடாது.

وَاللّٰهُ جَعَلَ لَـكُمْ مِّمَّا خَلَقَ ظِلٰلًا وَّجَعَلَ لَـكُمْ مِّنَ الْجِبَالِ اَكْنَانًا وَّجَعَلَ لَـكُمْ سَرَابِيْلَ تَقِيْكُمُ الْحَـرَّ وَسَرَابِيْلَ تَقِيْكُمْ بَاْسَكُمْ‌ؕ كَذٰلِكَ يُتِمُّ نِعْمَتَهٗ عَلَيْكُمْ لَعَلَّكُمْ تُسْلِمُوْنَ‏

தான் படைத்தவற்றிலிருந்து அல்லாஹ் உங்களுக்கு நிழல்களை ஏற்படுத்தினான். மலைகளில் உங்களுக்காகக் குகைகளையும் ஏற்படுத்தினான். வெப்பத்திலிருந்து உங்களைக் காக்கும் சட்டைகளையும், போரில் உங்களைக் காக்கும் கவச உடைகளையும் அவன் ஏற்படுத்தினான். நீங்கள் கட்டுப்பட்டு நடப்பதற்காக இவ்வாறே அவன் தனது அருட்கொடையை உங்களுக்கு முழுமைப்படுத்தினான்.         (திருக்குர்ஆன் 16:81)

ஒருநாள் பகல் அல்லது இரவு நேரத்தில் நபி (ஸல்) அவர்கள், அபூபக்ர் (ரலி) மற்றும் உமர் (ரலி) ஆகியோர் பசியின் காரணமாக வீட்டை விட்டு வெளியே வந்து அன்சாரித் தோழர் ஒருவருடைய வீட்டிற்குச் சென்றார்கள். வீட்டிற்கு வந்த மூவரையும் அந்த அன்சாரித் தோழரான) அபுல் ஹைஸம் (ரலி) அவர்கள் தமது தோட்டத்திற்கு அழைத்துச் சென்றார். அவர்களுக்காக அவர் ஒரு பாயை விரித்தார். பிறகு பேரித்தம் மரங்கள் நோக்கிச் சென்று ஒரு குலையை கொண்டு வந்து வைத்தார்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், “எங்களுக்காக கனிந்த பேரித்தம் பழங்களை பறித்திருக்கக் கூடாதா?” என்று கூறினார்கள். அதற்கு அவர், “அல்லாஹ்வின் தூதரே! செங்காய் மற்றும் கனிந்த பேரித்தம் பழங்களில் இருந்து தேர்வு செய்யவே நாடினேன்” என்று கூறினார். அவர்கள் அதைச் சாப்பிட்டார்கள். (அன்சாரித் தோழர் குடிப்பதற்காகக் கொண்டு வந்த) அந்த நீரைப் பருகினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “என் உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது சத்தியமாக! குளிர்ந்த நிழல், கனிந்த பழம், குளிர்ச்சியான நீர் இதுவும் அருட்கொடைகளில் உள்ளதாகும். இது பற்றியும் மறுமை நாளில் நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள்” என்று கூறினார்கள். (ஹதீஸின் ஒரு பகுதி)  (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி),   நூல்: திர்மிதீ-2369 (2292),

அல்லாஹுத்தஆலா இந்த ரமலானில் நம்மை ரஹ்மத்,மக்ஃபிரத்,நரக விடுதலை பெற்றவர்களாக ஆக்கி,லைலதுல் கத்ரின் பாக்கியத்தை வழங்கிடுவானாக!ஆமீன்...

வெளியீடு: செங்கை & காஞ்சிபுரம் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை.